தஞ்சை வட்டாரத்தில், தொடர் மழையால் 15 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது

தஞ்சை வட்டாரத்தில், தொடர் மழையால் 15 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் மரம் சாய்ந்தது.
தஞ்சை வட்டாரத்தில், தொடர் மழையால் 15 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது
Published on

தஞ்சாவூர்,

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பழைய பழுதடைந்த கட்டிடங்களில் மக்கள் யாரும் வசிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர் மழையினால் கட்டிடங்களின் சுவர்கள் எல்லாம் நனைந்து காணப்படுகிறது. குடிசை வீடுகள், ஓடுபோட்ட வீடுகளின் சுவர்கள் ஈரமாகி பல இடங்களில் இடிந்து விழுந்துவிட்டன. தஞ்சை கீழவாசல் டவுன் கரம்பை பகுதியில் 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துவிட்டன. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இதேபோல் மாரியம்மன்கோவில், புதுப்பட்டினம், நல்லிச்சேரி, திருவேதிக்குடி, நீலகிரி, ஆலக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் குடிசை வீடுகள், ஓடுபோட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

மரம் சாய்ந்தது

5 ஓடுபோட்ட வீடுகளும், 10 குடிசை வீடுகளும் என மொத்தம் 15 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து பகுதிஅளவாக சேதம் அடைந்தது. இந்த தகவலை அறிந்த தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. நேற்று மழை பெய்தபோது அவ்வப்போது காற்றும் வேகமாக வீசியது. இதில் அலுவலக வளாகத்தில் நின்ற வாகை மரம் ஒன்று சாய்ந்து அலுவலகத்திற்கு வெளியே நிற்கும் மின்கம்பத்தின் மீது விழுந்தது.

வெட்டப்பட்ட கிளைகள்

மின்கம்பத்தின் அருகே பஸ்சிற்காக மக்கள் காத்து நிற்பது வழக்கம். மழை பெய்ததால் மக்கள் யாரும் அங்கே நிற்காததால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. உடனே மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிலாளர்கள் விரைந்து வந்து மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com