வெட்டாற்றில் முதலை இருப்பதாக பொதுமக்கள் பீதி தீயணைப்பு வீரர்கள் தேடும் பணி தீவிரம்

கீழ்வேளூர் அருகே வெட்டாற்றில் முதலை இருப்பதாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வெட்டாற்றில் முதலை இருப்பதாக பொதுமக்கள் பீதி தீயணைப்பு வீரர்கள் தேடும் பணி தீவிரம்
Published on

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கோகூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் செல்லும் வெட்டாற்றில் முதலை இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது. கோகூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த வெட்டாற்றின் மறுகரையில் உள்ள ஒக்கூர் ஊராட்சி விளாம்பாக்கம் பகுதிக்கு செல்ல பாலம் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாததால் ஆற்றில் தண்ணீர் இல்லாதபோதும், குறைவான தண்ணீர் செல்லும்போதும் ஆற்றை கடந்தே சென்று வருகின்றனர்.

தற்போது ஆற்றில் குறைவான தண்ணீர் செல்வதால் விளாம்பாக்கம் பகுதிக்கு ஆற்றை கடந்தே சென்று வருகின்றனர். இந்தநிலையில் வெட்டாற்றில் முதலை இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கீழ்வேளூரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தற்காலிக பாலம்

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோகூர் - விளாம்பாக்கத்திற்கு தற்காலிக பாலம் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சந்தானம், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு, ஒன்றிய பொறியாளர் வெற்றிவேல் மற்றும் அலுவலர்கள் நேற்று கோகூர் பகுதிக்கு சென்று பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர். ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தற்காலிக மூங்கில் பாலம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்தனர். அப்போது நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், தலைஞாயிறு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலைகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் ஆற்றை கடந்து செல்பவர்களும், குளிப்பது உள்ளிட்டவைகளுக்காக ஆற்றுக்கு வரும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com