விழுப்புரம் பகுதியில் தர்பூசணி விற்பனை மும்முரம்

விழுப்புரம் பகுதியில் கோடை வெயிலை தணிக்கும் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம் பகுதியில் தர்பூசணி விற்பனை மும்முரம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலைகளில் செல்பவர்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர். குறிப்பாக பெண்கள் தங்கள் சேலையாலும், சுடிதார் துப்பட்டாவினாலும் தலையை மூடிக்கொண்டு செல்வதை காண முடிகிறது.

மேலும் உடல் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பழ ஜூஸ், கரும்புச்சாறு, குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கி பருகி வருகின்றனர். இதுதவிர நீர்ச்சத்து நிறைந்த இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் ஆகியவற்றையும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக அதிக நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக பழ வியாபாரிகள் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தர்பூசணி பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் நகரில் நேருஜி சாலை, ரங்கநாதன் சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, கோலியனூர், வளவனூர், காணை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தர்பூசணி பழங்களை மலைபோல் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஒரு கிலோ தர்பூசணி பழம் ரூ.15-ல் இருந்து ரூ.20 வரை விற்கப்படுகிறது. மற்ற பழங்களை காட்டிலும் தர்பூசணி பழத்தின் விலை குறைவாக இருப்பதால் அவற்றை அதிகளவில் பொதுமக்கள் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து தர்பூசணி பழ வியாபாரிகள் கூறுகையில், தற்போதுதான் தர்பூசணி சீசன் தொடங்கியுள்ளது. நாங்கள் திண்டிவனம், பண்ருட்டி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறோம். ஒரு டன் தர்பூசணி ரூ.3,500-க்கு வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். வாகன வாடகை போக எதிர்பார்த்த அளவில் லாபம் கிடைக்கிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில் தர்பூசணி பழங்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. கோடை காலம் ஆரம்பித்ததும் மேலும் விற்பனை அமோகமாக இருக்குமென எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com