பாவூர்சத்திரம் அருகே, காவலாளி கொலையில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

பாவூர்சத்திரம் அருகே காவலாளி கொலையில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாவூர்சத்திரம் அருகே, காவலாளி கொலையில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
Published on

பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கடையம் தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 68). இவர் பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டினத்தில் உள்ள ஒரு காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முருகன் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் மர்மநபர்களை தேடி வந்தனர். தனிப்படையினரின் விசாரணையில், அடைக்கலப்பட்டினம் அருகே உள்ள வட்டாலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற அன்னராஜ் (36), பூலாங்குளத்தை சேர்ந்த சக்திவேல் என்ற ஆனந்த் (32) ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ராமச்சந்திரனை ஏற்கனவே போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர். தலைமறைவாக இருந்த சக்திவேலை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அடைக்கலப்பட்டினம் பகுதியில் சக்திவேல் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதன்பேரில் போலீசார், பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்த சக்திவேலை நேற்று கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன், சக்திவேல் ஆகியோர் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் 2 பேரும் முருகன் வேலை பார்த்த காற்றாலைக்கு பெண்களை அடிக்கடி அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து உள்ளனர். இதனை முருகன் பார்த்து, 2 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேரும் முருகனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காற்றாலை அருகே ராமச்சந்திரன், சக்திவேல் ஆகியோர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த முருகன் 2 பேரையும் கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் 2 பேரும் சேர்ந்து முருகனை வெட்டிக் கொலை செய்து உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை கைது செய்த போலீசாரை நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர்உசேன், பயிற்சி துணை சூப்பிரண்டு தனலட்சுமி, பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னத்துரை, பலவேசம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com