

திருவண்ணாமலை,
தமிழக அரசு உத்தரவின்பேரில் நேற்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொது இடங்களில் 5 பேர் கூட்டமாக நிற்பதற்கோ, நடப்பதற்கோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தடை உத்தரவு காலங்களில் மருத்துவமனைகள், மருத்துவ சேவை மையங்கள், மருந்து கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டு இருக்கும்.
கூட்டமாக சென்று பொருட்களை பொதுமக்கள் வாங்கக் கூடாது. தனித்தனியாக செல்ல வேண்டும். வீட்டுக்கே சென்று கடைக்காரர்கள் பொருட்களை டோர் டெலிவரி மூலம் கொடுக்கலாம். கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஓட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் இயங்கலாம். ஆனால் அங்கு கூட்டம் சேர்க்கக் கூடாது. சந்தைகள் மற்றும் சந்தைகள் போன்று சிறு, சிறு தரை கடை வைத்திருப்பவர்கள் வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் தள்ளுவண்டியில் காய்கறிகளை வைத்து தெரு, தெருவாக சென்று விற்பனை செய்யலாம். மேலும் அவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும். இறைச்சி, மீன் கடைகளில் செல்போன் எண் அறிவித்து அதன் மூலம் டோர் டெலிவிரி செய்யலாம்.
கொரோனா தனி வார்டு திருவண்ணாமலை, செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தாலுகா மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள சிவனடியார்களுக்கு ஆசிரமங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அம்மா உணவகங்களில் தரமான உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கூட்டுக் குடும்பமாக உள்ளவர்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் ஒன்றாக இருந்து நேரத்தை கழிக்கக் கூடாது.
தனியார் பெரிய மருத்துவமனைகளும் அவசர காலங்களில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மலை கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்களில் அரசு பஸ்கள் மூலம் மருத்துவக்குழுவினர், சுகாதாரத் துறையினர் கொண்ட 15-க்கும் மேற்பட்ட குழுவினர் கிராமம், கிராமமாக அனுப்பி வைக்கப்பட்டு விழிப்புணர்வு மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளையும், முககவசம் போன்றவற்றை விற்பனை செய்பவர்களையும் மற்றும் சுகாதார பணிகளையும் கண்காணிக்க தனித் தனியாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி கூறியதாவது:-
144 தடை உத்தரவு காலத்தில் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது. தடையை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களை இணைக்கும் மாவட்ட எல்லை சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் 40 சாலைகள் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் தேவையில்லாமல் வெளி மாவட்டங்களுக்கு யாரும் செல்ல முடியாது. கடைகளுக்கு செல்ல வேண்டும் என்று வெளியே வருபவர்கள் தனித் தனியாக தான் வர வேண்டும். கூட்டமாக செல்லக் கூடாது. கடைகளில் பொருட்கள் வாங்கும்போது அரசு அறிவித்தபடி 3 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் கைக்குட்டையையாவது பயன்படுத்த வேண்டும்.
இதன் முக்கியத்துவத்தை யாரும் அறியாமல் முககவசம் அணியாமல் செல்கின்றனர். இது வேதனை அளிக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் வதந்திகள் பரப்புவது குறைந்து உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து பீதியை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவுகளை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் பரப்பினாலும் அவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.