

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 86 இடங்களில் குளம் போல் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த மழைநீர் மாநகராட்சியினரால் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பருவமழை
தமிழகத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் பெய்த மழை நேற்றும் நீடித்தது. நேற்று மதியம் வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மதியத்துக்கு பிறகு மழை நின்றது. ஆனால் தொடர்ந்து மேகமூட்டமாகவே காணப்பட்டது.
பொதுமக்கள் அவதி
இந்த மழை காரணமாக தூத்துக்குடியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி மாநகர பகுதியிலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதனால் 86 இடங்களில் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றப்பட்டு வருகின்றன. அதிநவீன மோட்டார்கள் 15 இடங்களில் இயங்கி வருகின்றன. இந்த பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மழை விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பிலான வாழைப்பயிர்களை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. அதே போன்று மானாவாரி பயிர்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூர் 41.2 மில்லி மீட்டர், காயல்பட்டினம் 27, குலசேகரன்பட்டினம் 25, விளாத்திகுளம் 28, காடல்குடி 20, வைப்பாறு 27, சூரங்குடி 18, கோவில்பட்டி 53, கழுகுமலை 30, கயத்தாறு 24, கடம்பூர் 25, ஓட்டப்பிடாரம் 90, மணியாச்சி 23, வேடநத்தம் 35, கீழஅரசடி 12, எட்டயபுரம் 26.5, சாத்தான்குளம் 25, ஸ்ரீவைகுண்டம் 26, தூத்துக்குடி 30.5 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.
கலெக்டர் ஆலோசனை
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த அனைத்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு முகாம்களை அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். முதல்நிலை பொறுப்பாளர்களை இந்த முறை நன்கு பயிற்சி அளித்து புது யுக்தியுடன் தயார்படுத்த வேண்டும்.
குளங்கள் கண்காணிப்பு
நமது மாவட்டத்தில் உள்ள 639 குளங்களையும் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக 100 சதவீதம் நிரம்பி உள்ள குளங்களை அந்தந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு அலுவலர் கண்காணித்து வர வேண்டும். விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி மழை நீர் வயல்களில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டைவிட இந்த முறை அதிக அளவு முகாம்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். முகாம்களில் அடிப்படை வசதிகளான கழிப்பறை, கம்பளி மற்றும் முகாம்களில் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் தரமான உணவுகளை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். வழங்கல் துறையின் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். மழை காலத்தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையின் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் வீரபத்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.