

அனுப்பர்பாளையம்,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டுராம்பட்டையை அடுத்த மலமஞ்சனூர்புதூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 39). இவருடைய மனைவி அருள்மணி (33). இவர்களுக்கு கோபாலகிருஷ்ணன் (10), என்ற மகனும், கீர்த்தி (6) என்ற மகளும் இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பூருக்கு வேலை தேடி வந்த தேவேந்திரனின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் போயம்பாளையத்தை அடுத்த நஞ்சப்பாநகரில் வசித்தபடி ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார்.
அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கோபால கிருஷ்ணன் 5-ம் வகுப்பும், கீர்த்தி 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். திருப்பூருக்கு வந்ததில் இருந்தே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தேவேந்திரன் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்து கரூருக்கு சென்று விட்டார். இதனால் மகன், மகளுடன் அருள்மணி தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக கோபாலகிருஷ்ணனை சொந்த ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அருள்மணி அனுப்பிவைத்தார். இதனால் சிறுமி கீர்த்தியும், அருள்மணியும் வீட்டில் தனியாக இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முழுவதும் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருள்மணி தங்கையின் கணவர் காமராஜ் (33) அருள்மணி வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும், கதவை திறக்காததால் ஜன்னலை உடைத்து உள்ளே எட்டி பார்த்த போது, அருள்மணி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அவர் அருகே கீர்த்தி மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு கீர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மயக்க நிலையில் இருந்த அருள்மணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சொந்த ஊரில் இருந்து திருப்பூருக்கு விரைந்து வந்த கோபாலகிருஷ்ணன் தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. இறந்து போன சிறுமி கீர்த்தியின் கழுத்தில் தடம் இருந்துள்ளது. இதனால் அருள்மணி சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் குடும்ப தகராறில் அருள்மணி மகளை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் அருள்மணியின் கணவர் தேவேந்திரனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் 6 வயது மகளை கொன்று விட்டு, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.