திருப்பூரில் கலந்தாய்வு நடத்தப்படாததால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் நேற்று கலந்தாய்வு நடத்தப்படாததால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.
திருப்பூரில் கலந்தாய்வு நடத்தப்படாததால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

திருப்பூர்,

பள்ளிக்கல்வி இயக்ககம் 2018-2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பணிநிரவல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதன்படி கடந்த 11-ந்தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொடக்கக்கல்வி இயக்குனர் அரசு ஆணை ஒன்றை வெளியிட்டார். அதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ளன.

எனவே இந்த 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் இல்லை. ஆனால் இம்மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெறலாம். ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆணை வழங்கப்படும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த ஆணை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தியின் உத்தரவுப்படி கலந்தாய்வு நடைபெற்று வந்த பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று கலந்தாய்வில் கலந்து கொள்ள வந்திருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் ஒட்டப்பட்டிருந்த ஆணையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்று செல்ல முடியாததாலும், முன்னதாகவே இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியும் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியின் முன்பு ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் வட்டார தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கனகராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் பதிவுமூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் தர்மராஜ் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். இதையடுத்து, ஆசிரியர்களிடையே பேசிய கல்வி அதிகாரிகள், இது கல்வித்துறை எடுத்த முடிவு. எங்களின் முடிவு அல்ல. அந்த முடிவின்படிதான் இன்று (நேற்று) கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து ஆசிரியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com