திருப்பூரில் பரபரப்பு, செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

திருப்பூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் பரபரப்பு, செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
Published on

திருப்பூர்,

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுரம் அமைந்துள்ள வளாகத்தில் வாலிபர் ஒருவர் நேற்று மாலையில் நுழைந்துள்ளார். அவர் திடீரென அங்கு இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, அதன் உச்சியில் நின்று கொண்டு கூச்சலிட்டுள்ளார். மேலும், நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி, தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினார்கள். பலர் தங்களின் செல்போன்களில் வீடியோவும் எடுத்து கொண்டிருந்தனர். அவர்கள் அந்த வாலிபரை கீழே இறங்கும்படி வற்புறுத்தி கூச்சலிட்டனர். ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து கீழே இறங்கி வர மறுத்து, அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

இதுகுறித்த தகவல் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் அவருடைய நண்பர்கள் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர், தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் நான் கீழே இறங்க மாட்டேன் என்று கூறி, கோபுரத்தின் உச்சியிலேயே தொடர்ந்து நின்று கொண்டிருந்தார். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அவர் அங்கேயே நின்று கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, அந்த வாலிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த வாலிபர் கோபுரத்தின் உச்சியை விட்டு மெதுவாக கீழே இறங்க தொடங்கினார். அவரை மீட்ட தீயணைப்புப்படை வீரர்கள் பத்திரமாக கீழே இறக்கி கொண்டு வந்தனர். அப்போது இந்த சம்பவத்தை வேடிக்கை பார்ப்பதற்காக அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பார்த்ததும் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்து சென்றனர்.

அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் உடுமலையை சேர்ந்த சபீர்(வயது 25) என்பதும், அவர் திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து அந்த பகுதியில் பிரிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் விஷயத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தினரை தவறாக சித்தரிப்பதாகவும், இதை கண்டித்தே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com