தியாகராயநகரில், குறைந்த ஊழியர்களுடன் திறக்கப்பட்ட நகை, துணிக்கடைகள் - சமூக இடைவெளியை கடைப்பிடித்த வாடிக்கையாளர்கள்

சென்னை தியாகராயநகரில் ஏ.சி. எந்திர பயன்பாடு இல்லாமல், குறைந்த ஊழியர்களுடன் நகை மற்றும் துணிக்கடைகள் திறக்கப்பட்டன. அதில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.
தியாகராயநகரில், குறைந்த ஊழியர்களுடன் திறக்கப்பட்ட நகை, துணிக்கடைகள் - சமூக இடைவெளியை கடைப்பிடித்த வாடிக்கையாளர்கள்
Published on

சென்னை,

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகள் கடந்த 4-ந்தேதி முதல் அமலானது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த சிறிய உணவகங்கள், பெயிண்ட் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்களுக்கான கடைகள், சிறிய ஜவுளி கடைகள், செருப்பு கடைகள், ஸ்டேஷனரி கடைகள், செல்போன் கடைகள், மென்பொருள் கடைகள், இரும்பு கடைகள் என பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

சென்னையின் வர்த்தக மையமான தியாகராயநகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறிய அளவிலான கடைகள் ஓரளவுக்கு திறக்கப்பட்டன. இந்த கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கி சென்றனர்.

கடைகள் திறப்பு

அதேவேளை ஏ.சி. எந்திர பயன்பாடின்றி கடைகள் திறக்கப்படலாம் என்று அரசு அறிவித்ததால், தியாகராயநகர் பகுதியில் சில நகை மற்றும் துணிக்கடைகள் நேற்று திறந்திருந்ததை பார்க்க முடிந்தது. அந்த கடைகளிலும் உங்கள் பாதுகாப்புக்காக குளிரூட்டப்பட்ட வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிரமத்துக்கு வருந்துகிறோம் என்ற வாசகம் ஒட்டப்பட்டிருந் தது. குறைவான ஊழியர்களுடன் அந்த கடைகள் செயல்பட்டன. கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்து வரிசையில் காத்திருந்து நகை, துணிகளை வாங்கிச் சென்றனர்.

இதுதவிர அழகு சாதன பொருட்கள், செருப்பு கடைகள், பொம்மை கடைகள் என ஏராளமான சிறிய சாலையோர கடைகளும் தியாகராயநகர் பகுதியில் திறந்திருந்ததை பார்க்க முடிந்தது. முக கவசங்கள் அணியாமல் கடைக்கு வர வேண்டாம் என்று கடைகளில் போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது.

ரங்கநாதன் தெருவில் வருகிற 17-ந் தேதிக்கு மேல் கடைகள் திறக்க வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு எடுத்துள்ளனர். எனவே ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் அந்த தெரு கடந்த சில நாட்களைப்போன்று வெறிச்சோடியே காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com