வால்பாறையில் மழையால் சேதமடைந்த எஸ்டேட் சாலைகள் சீரமைப்பு

வால்பாறையில் மழையால் சேதமடைந்த எஸ்டேட் சாலைகள் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. சாலக்குடிக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.
வால்பாறையில் மழையால் சேதமடைந்த எஸ்டேட் சாலைகள் சீரமைப்பு
Published on

வால்பாறை,

வால்பாறை பகுதியில் கடந்த 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பெய்த கனமழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலை மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மிகவும் பழுதடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மலைப்பாதையில் உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் 2 இடங்களில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும் மழையால் சேதம் அடைந்திருந்த எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரிய கல்லார் எஸ்டேட்,சக்தி எஸ்டேட், ஊசிமலை எஸ்டேட் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் சீரமைப்பு பணிகள் இன்னும் தொடங்க வில்லை. இதனால் அந்த பகுதிகளில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு இன்னும் அரசு பஸ்கள் இயங்கவில்லை.இதனால் பெரியகல்லார், ஊசிமலை, சக்தி ஆகிய எஸ்டேட் பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் சக்திதலநார் எஸ்டேட் சாலையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. பள்ளமாக இடிந்து விழுந்த சாலை பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது.

இதே போல பெரியகல்லார் எஸ்டேட் பகுதிக்கும் அரசு பஸ்கள் செல்லும் வகையில் சாலைகளை சீரமைப்பதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெரியகல்லார் எஸ்டேட் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் வால்பாறை, மளுக்கப்பாறை மற்றும் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள ஆதிவாசி பழங்குடியின மக்கள் ஆகியோர்நலன் கருதி, போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வால்பாறை பகுதியிலிருந்து சாலக்குடிக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக உடைந்து போன சாலைகளை தற்காலிகமாக சீரமைத்தது.

இதனால் 13 நாட்களுக்கு பிறகு, அந்தசாலையில் பஸ்போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதுபோல் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கும் 10 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் சுற்றுலாபயணிகள் செல்வதற்கு கேரள வனத்துறையினர் அனுமதிவழங்கியுள்ளனர். இதனால் சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் தற்போது வால்பாறை பகுதியில் அவ்வப்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் சாலை சீரமைப்பு பணிகளை அரசு அதிகாரிகள் காலதாமதமின்றி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள், எஸ்டேட் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com