வேப்பூரில், கார் மீது லாரி மோதல்; 2 பேர் சாவு - 8 பேருக்கு தீவிர சிகிச்சை

வேப்பூரில் கார் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேப்பூரில், கார் மீது லாரி மோதல்; 2 பேர் சாவு - 8 பேருக்கு தீவிர சிகிச்சை
Published on

வேப்பூர்,

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 46). இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று தனது உறவினர்களுடன் ஒரு காரில் புறப்பட்டார். காரில் 10 பேர் பயணம் செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு ஓடை பாலத்தை கடந்து கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பின்னால் வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து காரின் பின்பக்கமாக பயங்கரமாக மோதியது. இதில் கார் சாலையோரம் இருந்த ஓடையின் உள்ளே பாய்ந்து, கவிழ்ந்தது. காருக்குள் சிக்கிய அனைவரும் மரண ஓலம் எழுப்பினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாட்டிற்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விபத்து பற்றி அறிந்த வேப்பூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த ஜான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த கோமதி, ஈஸ்வரி, தீபிகா, வணம்மாள், சோலைராஜ், மகேந்திரன், மலர்விழி, சுரேந்திரன், குமார் ஆகியோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், குமார் உயிரிழந்தார். மற்ற அனைவருக்கும் டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com