விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மு.பரூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் நேற்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

எங்களுக்கு போதிய அளவுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் நாங்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம். குடிநீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்கும், விளை நிலங்களுக்கும் காலி குடங்களுடன் அலைந்து திரிந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகிறோம். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தோம். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும் குறைந்த அளவு வழங்கப்படும் தண்ணீரையும் சிலர் குழாயில் மின்மோட்டாரை பொருத்தி உறிஞ்சி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதை தவிர்க்க எங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். மேலும் சட்டத்தை மீறி குழாயில் மின்மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சுபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மேலாளர் சீதாபதி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொது மக்கள் அவரிடம் தங்களது கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர். அதை பெற்ற அவர், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை ஏற்று பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com