திருநங்கைகள் உள்பட 3 பேரை கொன்றது ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

திருநங்கைகள் உள்பட 3 பேரை கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருநங்கைகள் உள்பட 3 பேரை கொன்றது ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
Published on

நெல்லை,

நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூர் திருநங்கை காலனியில் வசித்தவர் பவானி (வயது 28). திருநங்கையான இவரும், முனைஞ்சிப்பட்டி அருகே காரியாண்டியைச் சேர்ந்த பெயிண்டர் முருகனும் (30) சேர்ந்து வாழ்ந்தனர். இவர்கள் தங்களுக்கு குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்ற தங்கவேலிடம் (30) ரூ.3 லட்சம் கொடுத்தனர்.

பின்னர் தங்கவேல் குழந்தையை தத்தெடுத்து கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றினார். இதையடுத்து பணத்தை திருப்பி தருமாறு முருகன், பவானி ஆகியோர் தங்கவேலிடம் அடிக்கடி தொந்தரவு செய்தனர். இந்த நிலையில் முருகன், பவானி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு திருநங்கை அனுஷ்கா என்ற அனு (24) ஆகிய 3 பேரும் கொலை செய்யப்பட்டதாக வாட்ஸ்-அப் பில் தகவல் பரவியது.

இதையடுத்து சக திருநங்கைகள் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதுடன், தங்கவேல், டிரைவர் செல்லத்துரை என்ற ராஜா (33), பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் சுனோவின் (29) ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் கக்கன்நகர் நாற்கரசாலை அருகில் உள்ள பாழடைந்த 2 கிணறுகளில் சாக்குமூட்டைகளில் கட்டி வீசப்பட்ட முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கைதான தங்கவேல் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

எனது சொந்த ஊரான சேலத்தில் வசித்தபோது, நெல்லை நரசிங்கநல்லூர் திருநங்கை காலனியைச் சேர்ந்த திருநங்கை ரேணுகாவுடன் டிக்-டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து திருநங்கை காலனிக்கு வந்து ரேணுகாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். பாளையங்கோட்டை மகராஜநகரில் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தேன்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை அனுஷ்காவுடனும் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னிடம் அடிக்கடி தொந்தரவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கடந்த மாதம் 25-ந் தேதி அனுஷ்காவை மகராஜநகரில் உள்ள வீட்டுக்கு வரவழைத்து, அவரை கம்பால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி காரில் ஏற்றி கே.டி.சி.நகர் கக்கன்நகர் நாற்கரசாலை அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசினேன். இதற்கு என்னுடைய டிரைவர் ராஜா, நண்பரான சுனோவின் ஆகியோரும் உதவினர்.

இதற்கிடையே முருகன், பவானி ஆகியோருக்கு குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, ரூ.3 லட்சத்தை வாங்கிக்கொண்டு, குழந்தையை தத்தெடுத்து கொடுக்காமலும் பணத்தை திருப்பி கொடுக்காமலும் தாமதப்படுத்தி வந்தேன். இதனால் முருகன் பணத்தை திருப்பி தருமாறு அடிக்கடி தொந்தரவு செய்தார்.

மேலும் எனது நண்பரான சுனோவின் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அவர்களுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அப்போது சுனோவினுக்கு திருநங்கைகளுடன் தொடர்பு இருப்பதாக, முருகன் அந்த இளம்பெண்ணிடம் கூறினார். இதனால் சுனோவினின் திருமண ஏற்பாடு நிறுத்தப்பட்டது.

எனவே முருகனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினோம். அதன்படி, அவரை கடந்த 8-ந் தேதி மகராஜநகர் வீட்டுக்கு வரவழைத்தேன். அங்கு டிரைவர் ராஜா, சுனோவின் ஆகியோருடன் சேர்ந்து முருகனை கம்பால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன். பின்னர் அவரது உடலையும், அனுஷ்காவின் உடலை வீசிய கிணற்றின் அருகில் உள்ள மற்றொரு கிணற்றில் வீசினோம்.

இந்த நிலையில் முருகனை காணாததால், இதுகுறித்து பவானி என்னிடம் வந்து முறையிட்டார். மேலும் அவர், குழந்தையை தத்தெடுத்து கொடுப்பதற்காக வழங்கிய ரூ.3 லட்சத்தை திருப்பி தருமாறு வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அனுஷ்கா, முருகன் ஆகியோரை கொலை செய்ததை போன்றே பவானியையும் கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி அவரை கடந்த 18-ந் தேதி மகராஜநகர் வீட்டுக்கு வரவழைத்தோம். அவரை கம்பால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி முருகனின் உடலை வீசிய கிணற்றிலேயே வீசினோம். திருநங்கைகள் உள்பட 3 பேரும் அடுத்தடுத்து மாயமானதால், சக திருநங்கைகள் எங்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் தங்கவேல் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான தங்கவேல், ராஜா, சுனோவின் ஆகிய 3 பேரிடமும் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் வைத்து, பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அங்கு திரண்டு வந்த திருநங்கைகள், 3 பேர் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் முறையிட்டனர்.

தொடர்ந்து கைதான தங்கவேல் உள்ளிட்ட 3 பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com