நெல்லை புதிய பஸ் நிலைய மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது

நெல்லை புதிய பஸ்நிலைய மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை குறைந்தது.
நெல்லை புதிய பஸ் நிலைய மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது
Published on

நெல்லை,

நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி விற்பனை மார்க்கெட்டுக்கு சமீபத்தில் சீல் வைக்கப்பட்டது. அதற்கு பதிலாக நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு மொத்த காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது. கடந்த 8-ந்தேதி முதல் அந்த மார்க்கெட் செயல்பட தொடங்கியது.

மார்க்கெட்டுக்கு சீல் வைப்பு, இடமாற்றம் ஆகியவற்றால் நெல்லைக்கு காய்கறிகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் முழு வீச்சில் செயல்பட தொடங்கியது. அங்கு காய்கறிகள் அதிகளவில் வந்து சேர்ந்தது. இதனால் காய்கறிகளின் விலை வழக்கத்தை விட குறைந்தது.

மொத்த விலையில் ரூ.16 ஆக இருந்த ஒரு கிலோ பல்லாரி ரூ.10 ஆகவும், ரூ.27 ஆக இருந்த உருளைக்கிழங்கு ரூ.22 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.35-ல் இருந்து ரூ.30 ஆகவும், ரூ.20 ஆக இருந்த கத்தரிக்காய் ரூ.13 ஆகவும் குறைந்தது. உச்ச விலையில் இருந்த கேரட் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.17 ஆக குறைந்தது. இதேபோல் வெண்டை ரூ.8, அவரை ரூ.12, வாழைக்காய் ரூ.5, பூசணி ரூ.3, தடியங்காய் ரூ.3, தக்காளி ரூ.10, நாட்டு மாங்காய் ரூ.15, ரூ.90 ஆக இருந்த இஞ்சி ரூ.55 என விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, மார்க்கெட்டில் கொரோனா தொற்று ஏற்படாதபடி தடுக்கும் வகையில் மாநகராட்சி உத்தரவுப்படி வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கை கழுவும் திரவம், முக கவசம் வழங்கப்பட்டது. சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் மார்க்கெட் நுழைவு வாசல் பகுதியில் நின்று சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பணிகளை மேற்கொண்டனர். முககவசம் அணியாமல் வந்த டிரைவர், வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. சானிடைசர் மூலம் கை கழுவிய பின்னரே மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com