இந்தியன் வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டு வசதிக்கடன்

இந்தியன் வங்கியில், குறைந்த வட்டியில் வீட்டு வசதிக்கடன் வழங்கப்படுகிறது என்று மண்டல மேலாளர் சுவாமிநாதன் கூறினார்.
இந்தியன் வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டு வசதிக்கடன்
Published on

தஞ்சாவூர்,

இந்தியன் வங்கி கும்பகோணம் மண்டலம் சார்பில் கட்டுனர்கள், கட்டிட பொறியாளர்கள் சந்திப்பு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வங்கியின் துணைப்பொது மேலாளரும், கும்பகோணம் மண்டல மேலாளருமான சுவாமிநாதன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

இந்தியன் வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டு வசதிக்கடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 8.25 சதவீதத்தில் குறைந்த வட்டியில் வீட்டு வசதிக்கடன் அளிக்கும் வங்கி இந்தியன் வங்கி மட்டுமே. வீடு கட்டுவதற்கும், வீடு வாங்குவதற்கும் மற்றும் வீட்டில் கட்டிட சீரமைப்பு பணிக்காகவும் இந்தியன் வங்கியில் வழங்கப்படும் கடன் வசதியை கட்டுனர்கள், பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதில் கடன் தொகை திருப்பிச்செலுத்தும் காலம் 30 வருடத்திற்கும் மற்றும் ரூ.1 லட்சத்திற்கு குறைந்த மாதத்தவணையாக ரூ.751 என்ற சலுகையையும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அளிக்கிறது. இந்தியர்கள் அல்லாது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. வீட்டு வசதிக்கடன் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் இருந்தால் உடனடியாக கடன் பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்க இந்தியன் வங்கிக்கு கும்பகோணம் மண்டலத்தில் 89 கிளைகள் உள்ளன. இதில் தஞ்சையில் மட்டும் இந்தியன் வங்கிக்கு 11 கிளைகள் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி பொது மேலாளரும், துணை மண்டல மேலாளருமான வெங்கடேசன், இந்தியன் வங்கியில் வீட்டு வசதிக்கடனுக்காக வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார்.

இந்திய கட்டுனர்கள் சங்க தலைவர் குமார், தஞ்சை கட்டிட பொறியாளர்கள் சங்க தலைவர் மணி, இந்தியன் வங்கி தஞ்சை மெயின் கிளை முதன்மை மேலாளர் ரவிச்சந்திரன், யாகப்பா நகர் கிளை முதன்மை மேலாளர் ராம்குமார், கிளை மேலாளர்கள் ஜெயராஜ், ராஜசேகர், திருமூர்த்தி, லீனா, திவ்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கும்பகோணம் மண்டல முதுநிலை மேலாளர் ராஜா, மேலாளர் ஜோசப், வர்த்தக மேலாளர் பிரசாந்த் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

முன்னதாக ஈஸ்வரி நகர் கிளை உதவி பொது மேலாளர் ராதாகிருஷ்ண ரெட்டி வரவேற்றார். முடிவில் தஞ்சை ஜங்ஷன் கிளை உதவி பொதுமேலாளர் கிருஷ்ணா ரெட்டி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com