ஒலிபெருக்கி விவகாரம் அனைத்துக்கட்சி கூட்டத்தை பா.ஜனதா புறக்கணித்தது ஏன்?- தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

ஒலிபெருக்கி விவகாரம் குறித்த அனைத்து கட்சி கூட்டத்தை பா.ஜனதா புறக்கணித்தது ஏன்? என்பதற்கு தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மும்பை,

ஒலிபெருக்கி விவகாரம் குறித்த அனைத்து கட்சி கூட்டத்தை பா.ஜனதா புறக்கணித்தது ஏன்? என்பதற்கு தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.

பா.ஜனதா புறக்கணிப்பு

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வருகிற 3-ந் தேதிக்குள் அரசு அவற்றை அகற்றாவிட்டால் எதிர்நடவடிக்கையில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ஒலிபெருக்கி விவகாரம் மராட்டியத்தில் விஷ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் மத வழிபாட்டு தலங்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது குறித்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகள் குறித்து விவாதிக்க மராட்டிய உள்துறை அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்தை பா.ஜனதா புறக்கணித்தது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

பஜனை செய்வோம்...

ஒலிபெருக்கி விவகாரத்தில் எங்கள் கட்சியின் நிலைபாடு மிகவும் தெளிவாக உள்ளது. இதில் கோர்ட்டு வழங்கிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

முன்பு நாங்கள் முழு நவராத்திரியிலும் விழித்திருப்போம், பஜனை செய்வோம். விநாயகர் சதுர்த்தியின்போதும் நள்ளிரவு வரை நிகழ்ச்சிகள் நடக்கும். இரவு 10 மணி முதல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததை அடுத்து அதை நாங்கள் கண்டிப்புடன் பின்பற்றினோம். தளர்வு அனுமதிக்கப்படும் 15 நாட்களுக்கு மட்டுமே நாங்கள் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துகிறோம்.

ஹிட்லரின் வழி

அதுமட்டும் இன்றி மும்பையில் என்ன நடந்தாலும் அது முதல்-மந்திரியின் விருப்பப்படி தான் நடக்கும். எனவே அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-மந்திரி இல்லை என்றால் உள்துறை மந்திரி என்ன செய்வார்?

நீங்கள் ஹிட்லரின் வழிகளை பயன்படுத்த விரும்பினால், நாங்கள் பேச்சை விட போராட்டத்தை தான் விரும்புவோம். இது எங்கள் மனநிலையாக மாறியதால் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதுமட்டும் இன்றி எங்கள் தலைவர்கள் மக்கள் முன்னிலையில் தாக்கப்படும்போது, வழக்குப்பதிவு செய்ய நாங்கள் போராட வேண்டி இருந்தால் இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொண்டு என்ன பயன்?

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com