தற்காலிக ஆசிரியர் பணிக்கு விடுமுறை நாளிலும் விண்ணப்பிக்க படையெடுத்த பட்டதாரிகள்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விடுமுறை நாளிலும் விண்ணப்பம் செய்வதற்காக, திண்டுக்கல்லில் பட்டதாரிகள் படையெடுத்தனர்.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விடுமுறை நாளிலும் விண்ணப்பிக்க படையெடுத்த பட்டதாரிகள்
Published on

திண்டுக்கல்,

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. கடந்த 4 நாட்களாக பள்ளிகள் திறக்காததால், மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. எனினும், போராட்டம் தீவிரமாக நடக்கிறது.

இதைத் தொடர்ந்து பெற்றோர்- ஆசிரியர்கள் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து, பள்ளிகளை திறக்கும்படி அரசு உத்தரவிட்டது. மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதேநேரம் திடீர் அறிவிப்பு என்பதால் முறையான விண்ணப்ப படிவங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

இதனால் கடந்த 25-ந்தேதி முதல் ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகள், மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களிடம் கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன், சுய விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு பட்டதாரிகள் படையெடுத்தனர். திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ஆனால், விடுமுறை நாள் என்பதால் அலுவலகம் திறக்கப்படவில்லை. ஆனால், நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் வட்டார கல்வி அலுவலகம் திறக்கப்பட்டு, அனைவரிடமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com