ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மற்றொரு முகம் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டுகிறார்

சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மற்றொரு முகம் வெளிவந்துள்ளது. அவர் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மற்றொரு முகம் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டுகிறார்
Published on

பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது, கைதிகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்தி பிரபலமானவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. இவர், சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிலர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது கர்நாடக மாநில ஊர்க்காவல் படையின் டி.ஐ.ஜி.யாக ரூபா இருந்து வருகிறார். இந்த நிலையில், போலீஸ் அதிகாரியான ரூபா மாடலிங் துறையில் ஆர்வமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்காக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் அவர் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.

அதாவது போலீஸ் சீருடையில் இல்லாமல் மாடல் உடையில் டி.ஐ.ஜி. ரூபா இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. மாடல் உடை அணிந்து விதவிதமாக அவர் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள டி.ஐ.ஜி. ரூபா, நான் போலீஸ் துறையை விட்டுவிட்டு மாடலிங் துறைக்கு செல்லவில்லை. போலீஸ் துறையில் பணியாற்றினாலும், மாடலிங் துறை யிலும் ஆர்வத்துடன் உள்ளேன். சினிமா நடிகைகள் தான் மாடலிங் துறையில் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களும் மாடலிங் துறையில் ஆர்வமாக இருக்கலாம், என்றார்.

ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, கடந்த 1998-ம் ஆண்டில் மிஸ் பெங்களூரு மற்றும் மிஸ் தாவணகெரே பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com