அல்லித்துறையில் ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 24 பேர் காயம் தேர்தல் நடத்தை விதிமுறையால் பரிசுகள் வழங்கப்படவில்லை

அல்லித்துறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 24 பேர் காயம் அடைந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பரிசுகள் வழங்கப்படவில்லை.
அல்லித்துறையில் ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 24 பேர் காயம் தேர்தல் நடத்தை விதிமுறையால் பரிசுகள் வழங்கப்படவில்லை
Published on

சோமரசம்பேட்டை,

திருச்சி அருகே உள்ள அல்லித்துறையில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளுடன் அதன் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் வந்து குவிந்தனர். வாடிவாசலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகர், உதவி போலீஸ் சூப்பிரண்டு டோங்ரே பிரவின், தாசில்தார் கனகமாணிக்கம், ஜீயபுரம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்து அமர்ந்தனர். அதன் பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு வந்த 504 காளைகளை கால்நடை மண்டல இணை இயக்குனர் சுரேந்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 2 காளைகள் மட்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று 236 மாடுபிடி வீரர்களை மணிகண்டம் ஒன்றிய மருத்துவர் தனலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். இதில் ஒருவருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

24 பேர் காயம்

வாடிவாசலில் இருந்து முதலாவதாக உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பிறகு பிற மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி வந்த பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் வாடிவாசலில் இருந்து ஓடின.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள் 24 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து வெளியே வந்த ஒரு மாடு திமிறி அங்கும், இங்கும் ஓடியதில் பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீசார் மிரண்டு அருகில் மாடுகளை பரிசோதிக்கும் இடத்தை நோக்கி ஓடினர்.

பரிசுகள் வழங்கப்படாததால் ஏமாற்றம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் ஏமாற்றத் துடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com