விண்ணில் கலந்த வீரமங்கை

நாம் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தால், வெற்றிக்கனி உள்ளங்கையில் தவழும் என்பதை மெய்ப்பித்துக்காட்டிய வீரமங்கை கல்பனா சாவ்லா.
விண்ணில் கலந்த வீரமங்கை
Published on

கல்பனா சாவ்லா 1961-ம் ஆண்டு அரியானா மாநிலத்தில் பிறந்தார். கல்பனா என்றால் சமஸ்கிருதத்தில் கற்பனை என்று பொருள். ஆனால், தன்னுடைய கனவு வெறும் கற்பனையாய் கலைந்துவிடாமல், அதை மெய்ப்பித்துக்காட்டிய சாதனை பெண்மணி அவர்.

சிறு வயதில், வானில் பறக்கும் விமானங்களை கண்டு வியந்த கல்பனா சாவ்லா, தானும் ஒருநாள் அந்த விமானத்தை ஓட்டுவேன் என தன் தோழிகளிடமும், நெருக்கமானவர்களிடமும் சொல்லி வந்தார். அதை கேட்டு கேலியாய் சிரித்த கூட்டம் பல உண்டு. ஆனால், கல்பனா சாவ்லா அதையெல்லாம் கண்டு கலங்கவில்லை. கிண்டல், கேலிகளை தன் கனவை மெய்ப்பிக்க உரமாக்கினார். கடின உழைப்பால், நாசாவில் அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் பணியில் சேர்ந்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்ட அனுமதியும் பெற்றார். தன் திறமையால் 1997-ம் ஆண்டு விண்வெளிக்கு பறக்கும் வாய்ப்பையும் பெற்றார். முதல் பயணத்தில் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து 10.67 மில்லியன் கிலோ மீட்டர் பயணித்து, பூமியை 252 முறை வலம் வந்தார். 54 மில்லியன் டாலர் மதிப்பில் இயற்பியல் சோதனைகளை வெற்றிகரமாக விண்வெளியில் நிகழ்த்திக்காட்டி பூமிக்கு திரும்பினார்.

சில ஆண்டுகளுக்கு பின்பு அந்த துயர சம்பவம் நடந்தது. 2003-ம் ஆண்டு புளோரிடாவில் உள்ள கேப் கெனவரல் முனையில் இருந்து 6 வீரர்களுடன் கல்பனா சாவ்லா விண்ணுக்கு ஆய்வுக்காக புறப்பட்டார். பல விண்வெளி ஆராய்ச்சிகளை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக திட்டமிட்டப்படி பிப்ரவரி 1-ந்தேதி தரையிறங்க ஆயத்தமானார்கள். பூமியைத் தொட 16 நிமிடங்கள் இருந்தபோது, அந்த விண்கலம் வெடித்து சிதறியது. அதில் பயணித்த கல்பனா சாவ்லா உட்பட 6 வீரர்களும் உயிரிழந்தனர். கல்பனா சாவ்லாவை நினைவுகூரும் வகையில், 2001-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்ட சிறிய கோளுக்கு கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல சாலைகள் அவருடைய பெயரை சுமந்துகொண்டு இருக்கின்றன. அவர் மண்ணில் மரணித்தாலும், வானத்து நட்சத்திரங்களில் ஒன்றாய் இன்றும் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார்.

-கிருஷ்ணா கணேஷ்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com