காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி மாவட்டத்தில் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
Published on

ஆலங்குளம்,

பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி ஆலங்குளம்-தென்காசி ரோடு பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு வட்டார காங்கிரஸ் சார்பில், முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காமராஜர், காந்தி படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தென்காசி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை அவர் இயக்கி வைத்தார். தொடர்ந்து அவர், ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்று நட்டு, ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சிகளில், தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் கீர்த்தி, சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில், பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேற்கு மண்டல செயலாளர் மேத்யு தினகரன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன் தலைமையில், மாவட்ட செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கீழப்பாவூர் ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 10 இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர் கே.டி.பாலன், மாவட்ட வர்த்தக அணி ராஜபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் லூர்து நாடார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தவசிமுத்து, நகர செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், காமராஜர் பயன்படுத்திய கார் உடைந்த நிலையில் சென்னை காமராஜர் அரங்கில் உள்ளது என்றும், அதனை அரசுடைமையாக்கி பராமரிப்பு செய்து காமராஜர் அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com