கன்னட ராஜ்யோத்சவா தின கொண்டாட்டத்தையொட்டி எதிர்த்து: மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி சார்பில் பெலகாவியில் - கருப்புதினம் அனுசரிப்பு

கன்னட ராஜ்யோத்சவா தின கொண்டாட்டத்தையொட்டி எதிர்த்து மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி சார்பில் பெலகாவியில் கருப்புதினம் அனுசரிப்பு கருப்பு நிற ஆடைகள் அணிந்து ஊர்வலம் சென்றனர்.
கன்னட ராஜ்யோத்சவா தின கொண்டாட்டத்தையொட்டி எதிர்த்து: மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி சார்பில் பெலகாவியில் - கருப்புதினம் அனுசரிப்பு
Published on

பெலகாவி,

கன்னட ராஜ்யோத்சவா தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி சார்பில் பெலகாவியில் கன்னட ராஜ்யோத்சவா தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. மேலும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு நிற ஆடைகள் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

மொழிவாரி மாநிலமாக கர்நாடகம் உருவான தினம் நவம்பர் மாதம் 1-ந் தேதி ஆகும். இந்த நாளை கன்னட ராஜ்யோத்சவா விழாவாக மாநில அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று மாநிலம் முழுவதும் கன்னட ராஜ்யோத்சவா தினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பெலகாவி மாவட்டத்தை மராட்டிய மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி அமைப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கிடையே நேற்று அவர்கள் கன்னட ராஜ்யோத்சவா தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புதினம் அனுசரித்தனர்.

அதன்படி அவர்கள் நேற்று காலையில் பெலகாவி சம்பாஜி சர்க்கிளில் இருந்து பசவேஸ்வரா சர்க்கிள் வரை ஊர்வலமாக நடந்து சென்றனர். இன்னொரு தரப்பினர் சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் அனைவரும் கருப்பு நிற சட்டைகள், டீ-சர்ட்கள் அணிந்திருந்தனர். சிலர் கைகளில் கருப்பு பட்டை கட்டி இருந்தனர். இந்த ஊர்வலத்தின்போது அவர்கள் பெலகாவியை, மராட்டிய மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர். இந்த ஊர்வலத்தையொட்டி நேற்று பெலகாவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் கலபுரகியில் நேற்று பிரத்யேக கல்யான கர்நாடக போராட்ட சமிதி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கன்னட ராஜ்யோத்சவா தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வடகர்நாடக மாவட்டங்களான கலபுரகி, யாதகிரி, பீதர், கொப்பல், பல்லாரி மற்றும் ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இதனால் வடகர்நாடக மாவட்டங்களை ஒன்றாக இணைத்து தனிமாநிலம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் தனிமாநிலம் கோரி சிவப்பு நிற கொடியை ஏற்றினர். இந்த கொடியின் மையப்பகுதியில் தனிமாநில வரைபடமும், மாவட்ட பெயர்களும் கன்னட மொழியில் எழுதப்பட்டு இருந்தன. இதுபற்றி அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கலபுரகியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com