காரிப்பட்டி போலீசாரை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா 50 பேர் கைது

காரிப்பட்டி போலீசாரை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரிப்பட்டி போலீசாரை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா 50 பேர் கைது
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரித்தனர். அதற்கு தங்களது உறவினர்கள் மீது காரிப்பட்டி போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும், மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் முறையிட்டு நியாயம் கேட்க வந்திருக்கிறோம். எனவே, கலெக்டர் வந்து எங்களை சந்திக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு காரிப்பட்டி போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்தனர். இதில் பெண்கள் உள்பட மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்த தினேஷ், ஜெகன், கண்ணன், தண்டபாணி, சரவணன், தமிழ்செல்வன் உள்பட 9 பேரை காரிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுபற்றி கேட்டால் வழிப்பறி செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறுகிறார்கள். அவர்கள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், 9 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வாறு செய்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மனம் திருந்தி வாழும் எங்களது குடும்பத்தினர் மீது காரிப்பட்டி போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, கைது செய்த அனைவரையும் போலீசார் விடுவிக்க வேண்டும் என்றனர்.

அதேசமயம், காரிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 9 பேர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com