கர்நாடகத்தில் சொத்து வரியை உயர்த்த முடிவு கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தொடரை வருகிற 28-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 5-ந்தேதி வரை நடத்துவது என்றும், கர்நாடகத்தில் சொத்து வரியை உயர்த்தவும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் சொத்து வரியை உயர்த்த முடிவு கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
Published on

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா நெருக்கடி காரணமாக பட்டுக்கூட்டின் விலை குறைந்துள்ளது. இதனால் பட்டு விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் ரூ.15 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தில் ரூ.15 கோடி செலவில் 325 அடி உயரத்தில் பசவண்ணரின் சிலை நிறுவப்படும். அதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.5 கோடி விரைவில் விடுவிக்கப்படும். தொழிற்பயிற்சி திட்டம் மேம்படுத்தப்படுகிறது.

88 சதவீத பங்குகள் டாடா தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கப்படும். இது ரூ.220 கோடி திட்டம் ஆகும். நகராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூரு தவிர்த்து மாநகராட்சிகள், புரசபைகள், பட்டண பஞ்சாயத்து, மற்றும் நகரசபைகளில் சொத்து வரியை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும்.

வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் மீதான சொத்து வரி 3 சதவீதம் உயரும். ஒருங்கிணைந்த நீர்ப்பாசன உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நேரடி நியமனம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையின் கூட்டுக்குழு கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இது பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வரை நடைபெறும். நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இதில் கவர்னர் வஜூபாய்வாலா உரையாற்றுகிறார். பாலகங்காதரநாத சுவாமி பிறந்த ஊரான பானந்தூரில் ரூ.25 கோடி செலவில் கலாசார மையம் அமைக்கப்படும். இவ்வாறு மாதுசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com