கர்நாடக சட்டசபைக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் சித்தராமையா கோரிக்கை

வாக்குப்பதிவு எந்திரத்தை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. எனவே கர்நாடக சட்டசபைக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு முதல்-மந்திரி சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் சித்தராமையா கோரிக்கை
Published on

பெங்களூரு,

முதல்-மந்திரி சித்தராமையா ஒருநாள் சுற்றுப்பயணமாக ராய்ச்சூர் மாவட்டத்திற்கு நேற்று சென்றார்.

அவர் மான்வியில் நடந்த பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குஜராத் சட்ட சபைக்கு தேர்தல் முடிவடைந்து உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கடந்த காலங்களில் பொய்யான வரலாறு உண்டு. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை வருகிற 18-ந் தேதி பார்ப்போம்.

வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் ஆணையரை நியமிக்கும் அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளது. இதனால் வாக்குப்பதிவு எந்திரங்களை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இதை நான் ஒருவன் மட்டும் சொல்லவில்லை. உத்தரபிரதேச தேர்தலின்போது மாயாவதி, அகிலேஷ் யாதவ் மற்றும் அத்வானி ஆகியோரும் கூறினர்.

அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அந்த நாடுகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறின. வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவதற்கு என்ன கஷ்டம் உள்ளது? வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துவது சரியானது. இதுகுறித்து நான் ஏற்கனவே ஆலோசனை நடத்தினேன்.

அதனால் கர்நாடக சட்டசபை தேர்தலின்போது வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுவேன். நேரில் சென்றும் கோரிக்கை விடுப்பேன். குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com