கருணாநிதி மறைவையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தொண்டர்கள் மவுன ஊர்வலம்

கருணாநிதி மறைவையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தொண்டர்கள் மவுன ஊர்வலம் சென்றனர்.
கருணாநிதி மறைவையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தொண்டர்கள் மவுன ஊர்வலம்
Published on

கரூர்,

கருணாநிதியின் மறைவையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கரூரிலுள்ள அறிவாலயத்தில் தி.மு.க. கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

நேற்று மாலையில் தலைமை செயற்குழு உறுப்பினர் சுப.ராஜகோபால் தலைமையில் கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தொண்டர்களின் மவுன ஊர்வலம் கரூரில் நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் பலர் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.

ஊர்வலம் ஜவகர்பஜாரில் இருந்து புறப்பட்டு தாலுகா அலுவலகம் வழியாக கரூர் பஸ் நிலையம் வந்து, அங்குள்ள அண்ணாசிலையை அடைந்தது. பின்னர் அங்கு கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அண்ணாவின் வழியில் கருணாநிதி கட்டுக்கோப்பாக கழகத்தை வழி நடத்தி மக்கள் பணி ஆற்றியதை போல் கழக உடன் பிறப்புகள் என்றைக்கும் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக பணியாற்றுவோம் என கரூர் மாவட்ட தொண்டர்கள் உறுதிமொழி யேற்றனர். பெரும்பாலானோர் கருணாநிதியின் மறைவை தாங்கி கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்த நிலையில் இரவு 7 மணியளவில் சென்னையில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது உணர்ச்சி பொங்க கரூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதியில் தி.மு.க. தொண்டர்கள் கண்கலங்கினர். பின்னர் வெங்கமேடு உள்ளிட்ட இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து தொண்டர்கள் மொட்டையடித்து கொண்டனர்.

இதேபோல் ரெங்கநாத புரம் ஊராட்சி கட்டளையில் தி.மு.க.வினர் மொட்டையடித்து கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com