கருணாநிதி மரணம்: கடைகள் அடைப்பு-பஸ்கள் ஓடவில்லை சாலைகள் வெறிச்சோடி கிடந்தன

கருணாநிதி மரணம் அடைந்ததை முன்னிட்டு நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பஸ்கள் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
கருணாநிதி மரணம்: கடைகள் அடைப்பு-பஸ்கள் ஓடவில்லை சாலைகள் வெறிச்சோடி கிடந்தன
Published on

நாமக்கல்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று நாமக்கல்லில் பஸ், லாரி, ஆட்டோ என எந்த கனரக வாகனமும் இயக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நாமக்கல் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது. பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் பஸ்கள் வெளியேறும் பகுதி என இரு இடங்களிலும் போலீசார் தடுப்பு வைத்து இருந்தனர்.

இதேபோல் திருச்சி சாலை, சேலம் சாலை, மோகனூர் சாலை, சேந்தமங்கலம் சாலை, பரமத்தி சாலை என அனைத்து சாலைகளும் முழுஅடைப்பு நாட்களில் இருப்பது போல வெறிச்சோடி கிடந்தன.

நாமக்கல் பஸ்நிலையம், கடைவீதி, பிரதான சாலை என நகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்தனர். ஒருசில பூக்கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

இதேபோல் ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

நாமக்கல்லில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு இருந்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்ப முடியாமல் தவித்தனர். இதேபோல் நகரில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும் நேற்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட்டும் இயங்கவில்லை. பெரும்பாலான லாரி பட்டறைகளும் நேற்று மூடப்பட்டு இருப்பதை காண முடிந்தது. தபால் நிலையங்கள் திறந்து இருந்தாலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. நகர் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ராசிபுரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார், லாரிகள், ஆட்டோக்கள் உள்பட அனைத்து வகையான வாகனங்களும் ஓடவில்லை. ராசிபுரம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி உள்பட அனைத்து பகுதிகளிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தினசரி மார்க்கெட், உழவர்சந்தை திறக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மிகவும் குறைந்த நோயாளிகளே வந்திருந்தனர். மருந்து கடைகள் திறக்கப்படவில்லை.

பரமத்திவேலூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அனைத்து வர்த்தக சங்கங்களின் சார்பில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது. பரமத்திவேலூர் காமராஜர் பஸ்நிலையத்தில் இருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ் நிலையம் பயணிகள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை முதல் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதேபோல நேற்று காலை முதல் பரமத்திவேலூரில் உள்ள தினசரி வாழைத்தார், வெற்றிலை மற்றும் பிலிக்கல்பாளையத்தில் உள்ள கரும்பு வெல்ல, சர்க்கரை விவசாயிகள் ஏலச்சந்தைகளிலும் நேற்று ஏலம் நடைபெறவில்லை. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் முன்னெரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com