காஷ்மீர் தாக்குதலில் பலியான சுப்பிரமணியன் குடும்பத்துக்கு நீதிபதிகள் நேரில் ஆறுதல்

காஷ்மீர் தாக்குதலில் பலியான சுப்பிரமணியன் குடும்பத்துக்கு நீதிபதிகள் நேரில் ஆறுதல் கூறினார்கள்.
காஷ்மீர் தாக்குதலில் பலியான சுப்பிரமணியன் குடும்பத்துக்கு நீதிபதிகள் நேரில் ஆறுதல்
Published on

கயத்தாறு,

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரியைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் வீர மரணம் அடைந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாதன் தலைமையில், மாவட்ட சட்ட பணிகள் ஆணைய குழு செயலாளர் நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், சப்-கோர்ட்டு நீதிபதிகள் செல்வம் (தூத்துக்குடி), பாபுலால் (கோவில்பட்டி), உரிமையியல் நீதிபதிகள் ஹசன் முகம்மது, நிஷாந்தினி மற்றும் நீதிபதிகள் சங்கர், தாவூது அம்மாள், சண்முகம் உள்ளிட்டவர்கள் நேற்று சவலாப்பேரிக்கு சென்று, சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறினர்.

அவர்கள், அங்குள்ள சுப்பிரமணியனின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அவரது நினைவிடத்திலும் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். தூத்துக்குடி மாவட்ட நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் சார்பில், சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாதன் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாதன் கூறியதாவது:-
துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். தனது கணவர் நாட்டுக்காக வீர செயல் புரிந்தது போன்று, அவருடைய மனைவி கிருஷ்ணவேணியும் ராணுவத்தில் உயர்ந்த பதவியில் சேர வேண்டும். அவர் பி.காம். பட்டதாரி. அவர் ராணுவத்திலோ அல்லது மற்ற துறைகளிலோ உயர்ந்த பதவியில் வருவதற்கு போட்டி தேர்வுகளை எழுத வேண்டும். அவரும் தனது கணவரைப் போன்று நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சாயர்புரம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் சங்கர், சாயர்புரம் நகர தலைவர் ஜேக்கப், முன்னாள் கவுன்சிலர் பிச்சைமணி, பாபுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ராணுவ வீரர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பிரவினா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com