கதிர்காமம் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்றுவோம் நாராயணசாமி உறுதி

கதிர்காமம் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்றுவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
கதிர்காமம் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்றுவோம் நாராயணசாமி உறுதி
Published on

புதுச்சேரி,

கே.எஸ்.பி. அறக்கட்டளை மற்றும் கதிர்காமம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். கே.எஸ்.பி. ரமேஷ் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளவர்களில் 95 சதவீதம் பேர் பெண்களாக உள்ளர்கள். நீங்கள் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுபோடுவீர்கள். புதுவை அரசு சார்பில் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிட கடந்த 2 ஆண்டுகளாக போராட வேண்டிய நிலை உள்ளது.

இலவச அரிசி, சென்டாக் கல்வி உதவித்தொகை என எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்க தடை போட்டார்கள். அதேபோல் பொங்கலுக்கும் தடை போடுவார்கள். இருந்தாலும் நாங்கள் மக்களுக்கு தேவையானதை தருவோம்.

முன்பு இந்த தொகுதியை சேர்ந்தவர் முதல்-அமைச்சராக இருந்தார். இந்திராநகர், கதிர்காமம், தட்டாஞ்சாவடி தொகுதிகள் அவர்கள் தொகுதியாக இருந்தது. அவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்தார்கள். தற்போது கதிர்காமத்தில் கே.எஸ்.பி. ரமேசும், இந்திராநகரில் ஏ.கே.டி.ஆறுமுகமும் வந்துள்ளார்கள். தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் ஆள் தயார் செய்து வருகிறோம்.

முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். முதல்-அமைச்சர் பதவிதான் அவர்களுக்கு வேண்டும். அதற்கு அவர்கள் வீட்டிலேயே ஒரு நாற்காலியில் முதல்-அமைச்சர் என்று எழுதி வைத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான். முதல்-அமைச்சர் பதவியில் இல்லாமல் ஒருவருக்கு தூக்கமே வரமாட்டேன் என்கிறது. கோவில் கோவிலாக சென்று தவம் செய்து வருகிறார்கள். யாராக இருந்தாலும் உழைத்துதான் பதவிக்கு வரவேண்டும்.

மக்களுக்கு அவர்களாக எதையும் கொடுக்கமாட்டார்கள். பிறர் கொடுப்பதையும் தடுப்பார்கள். எம்.எல்.ஏ. என்பவர் மக்களின் குறைகளை கேட்டு அதை தீர்த்துவைக்க வேண்டும். இந்த கதிர்காமம் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்றுவோம். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

விழாவில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ராஜீவ்காந்திதான் பஞ்சாயத்துராஜ் தேர்தல்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தார். அதனால்தான் இப்போது பெண்கள் பலர் உயர் பதவிகளில் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில்தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருந்தது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரது வங்கிக்கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் ஒரு பைசாகூட போடவில்லை. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை குறையும் என்றார். ஆனால் அதை உயர்த்திவிட்டார்கள்.

தமிழகம், புதுவையில் கஜா புயலினால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல அவர் வரவில்லை. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட நிவாரணம் தர மத்திய அரசுக்கு மனமில்லை.

புதுவையில் மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு கவர்னர் கிரண்பெடி மூலம் நிறுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அவர்கள் தொல்லை கொடுத்து வருகிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி நடத்துவது பொய் காங்கிரஸ் கட்சி. முதல்-அமைச்சர் பதவியை கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு அவர் துரோகம் செய்தார்.

மகளிர் சக்தி என்பது மிகவும் பலம் வாய்ந்தது. இந்த சக்தி வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்திய அரசை தூக்கி அடிக்கும். புதுவையில் காங்கிரஸ் வேட்பாளரை ஜெயிக்க வைப்போம். இவ்வாறு சஞ்சய்தத் பேசினார்.

கே.எஸ்.பி. அறக்கட்டளை நிறுவனர் கே.எஸ்.பி. ரமேஷ் பேசியதாவது:-
இந்த விழா நடக்கக்கூடாது என்று சிலர் நினைத்தனர். விழா நடக்கக்கூடாது என்பதற்காக நெருக்கடி கொடுத்தனர். எவ்வளவு இடைஞ்சல் வந்தாலும் நான் மக்களுக்கு தேவையானதை கொடுப்பேன். யாருக்கும் பயப்படமாட்டேன். தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்த தொகுதியில் நிற்கப்போவதாக சொல்கிறார்கள். அவரை என்னை எதிர்த்து நிற்க சொல்லுங்கள். பதவி தருவதாக கூறி என்னை என்.ஆர்.காங்கிரசுக்கு கூப்பிட்டார்கள். அந்த கட்சியில் எந்த பதவி தந்தாலும் எனக்கு வேண்டாம். உங்களிடம் இனிமேல் வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். இவ்வாறு கே.எஸ்.பி. ரமேஷ் பேசினார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com