கெங்கரை- கூட்டாடா சாலையில் உலா வந்த புலி வாகன ஓட்டிகள் பீதி

கீழ்கோத்தகிரி அருகே கெங்கரை- கூட்டாடா சாலையில் உலா வந்த புலியால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
கெங்கரை- கூட்டாடா சாலையில் உலா வந்த புலி வாகன ஓட்டிகள் பீதி
Published on

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டுயானை, காட்டுப்பன்றி, காட்டெருமை, கரடி, புள்ளி மான், சிறுத்தைப்புலி, புலி போன்ற வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன. ஒருசில நேரங்களில் மனித- வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் வனவிலங்குகள் அட்டகாசம் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் கீழ் கோத்தகிரி அருகே உள்ள கெங்கரையில் இருந்து கூட்டாடா செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் புலி ஒன்று உலா வந்தது. இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பீதி அடைந்து, தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 5 நிமிடங்கள் சாலையில் உலா வந்த புலி, அதன்பிறகு அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இதையடுத்து அந்த வழியே மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு கீழ்கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டத்தில் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதன் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் அதே இடத்தில் தீயிட்டு எரித்தனர். அதன்பிறகு கீழ்கோத்தகிரி பகுதியில் புலி நடமாட்டம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது உறுதியாகி உள்ளது. கீழ்கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஒன்னட்டி, கெங்கரை, கூட்டாடா உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன.

இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கெங்கரை- கூட்டாடா சாலையில் சுற்றித்திரியும் புலியை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்கவோ அல்லது அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com