குறிஞ்சிப்பாடி அருகே விவசாயி கொலை, தேடப்பட்ட வாலிபர் விருத்தாசலம் கோர்ட்டில் சரண்

குறிஞ்சிப்பாடி அருகே விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் விருத்தாசலம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
குறிஞ்சிப்பாடி அருகே விவசாயி கொலை, தேடப்பட்ட வாலிபர் விருத்தாசலம் கோர்ட்டில் சரண்
Published on

விருத்தாசலம்,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கோ.அப்பியம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50), விவசாயி. இவருக்கு ராசாத்தி(45) என்ற மனைவியும், 3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். சேகரும், அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி அன்பரசன், சேகரை ஒரு காரில் அழைத்துக் கொண்டு அம்பலவாணன் பேட்டையில் உள்ள தனது நண்பர் பாஸ்கரன்(33) என்பவரது வீட்டுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் சேகர் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது பாஸ்கரன் வீட்டின் அருகே சேகர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். ஆனால் பாஸ்கரனும், அன்பரசனும் தலைமறைவாகி விட்டனர்.

இதுபற்றி அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் சேகர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த அன்பரசன், திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பாஸ்கரனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பாஸ்கரன், நேற்று காலை விருத்தாசலம் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு கோபிநாத் முன்னிலையில் சரணடைந்தார். இதையடுத்து பாஸ்கரனை 15 நாட்கள் சிறையில் வைக்க மாஜிஸ்திரேட்டு கோபிநாத் உத்தரவிட்டார். இதையடுத்து பாஸ்கரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com