கள்ளக்காதல் தகராறில் விவசாயி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

கள்ளக்காதல் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கள்ளக்காதல் தகராறில் விவசாயி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை கிருஷ்ணாபுரம் கண்டிகை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). விவசாயி. இவரது மனைவி சூர்யா (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சூர்யா அதே பகுதியில் உள்ள கிளினிக்கில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் பொன்னேரி நெடுவீரம்பாக்கம் காலனியை சேர்ந்த டில்லிபாபு (30) என்பவர் அந்த கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது சூர்யாவிற்கும், டில்லிபாபுவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி அந்த கிளிக்கிலேயே உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சூர்யாவின் கள்ளக்காதலை அறிந்த அவரது கணவர் வெங்கடேசன் ஏன் இவ்வாறு கள்ளத்தொடர்பில் ஈடுபடுகிறாய் என தன்னுடைய மனைவியை கண்டித்து டில்லிபாபுவை நேரில் அழைத்து அவரை அடித்து உதைத்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த டில்லிபாபு சூர்யாவிடம், உன் கணவர் உயிரோடு இருக்கும் வரை நாம் இருவரும் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே அவரை தீர்த்துக் கட்டலாம் என கூறி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 20-12-2012 அன்று வெங்கடேசன் மோட்டார்சைக்கிளில் ஆரணிக்கு பிரியாணி வாங்க சென்றார். இதை அறிந்த டில்லிபாபு அவரை பின்தொடர்ந்து சென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்து விட்டு அக்கரம்பாக்கம் ஏரியில் உடலை வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து வெங்கடேசனின் சகோதரர் வேலு பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டில்லிபாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மாவட்ட கூடுதல் அரசு வக்கீலாக மோகன்ராம் வாதாடினார். வழக்கை விசாரித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தீப்தி அறிவுநிதி, குற்றவாளியான டில்லிபாபுவுக்கு ஆயுள்தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com