கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் உறவினர்கள் தங்க அனுமதி

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் அவர்களது உறவினர்கள் தங்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் உறவினர்கள் தங்க அனுமதி
Published on

சென்னை,

தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேக வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுடன், அவர்களது உறவினர்களையும் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் உறவினரான கொரட்டூரை சேர்ந்த அமுதா கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எனது உறவினர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கு மருத்துவ பணியாளர்கள் குறைவாக உள்ளதாகவும், அதனால் அவரை கவனிக்க அவருடன் ஒருவர் தங்க வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் எனது கணவர் கொரோனா பிரத்யேக வார்டில் தினமும் தங்கும் நிலை ஏற்பட்டது. இதைப்போல் அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களுடன் பலர் தங்குகின்றனர். அவர்கள் அனைவரும் வெளியேயும் சென்று வருகின்றனர்.

மேலும் உறவினரை கவனித்துக் கொள்ளும் எனது கணவருக்கு எந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும் வழங்கப்படவில்லை. கொரோனா வைரசால் பாதிக்கப்படுகிறவர்கள் தொடும் இடங்களில் இருந்து கூட இந்த வைரஸ் பரவுகிறது. இந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்படும் பிரத்யேக வார்டில் பாதிப்பு இல்லாதவர்களை தங்க வைப்பது, மருத்துவமனையே நோய் தொற்று பரவ அடித்தளமிட்டது போன்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டீன் விளக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பல்வேறு வயதினர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் முதியவர்கள், நடக்க இயலாதவர்களும் உள்ளனர். இங்கு சிகிச்சை பெறும் அனைவருக்கும் பணி செய்ய துப்புரவு ஊழியர்களால் முடியவில்லை. இதனால் உடை மாற்றுவது, உணவு வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு மட்டும் ஒரு சில நோயாளிகளின் உறவினர்களை அனுமதிக்கின்றோம்.

அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் கூட அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உடைகள் வழங்குகின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com