

கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அதிகாலை நுழைந்த 11 பேர் கொண்ட கும்பல் எஸ்டேட் காவலாளி ஓம்பஹதூர் என்பவரை கொலை செய்து மற்றொரு காவலாளி கிருஷ்ணபஹதூரை தாக்கிவிட்டு எஸ்டேட் பங்களாவுக்குள் நுழைந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் 6 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் சாமியார், வயநாடு மனோஜ், சதீசன், திபு, குட்டி பிஜின், ஜம்ஷீர்அலி, ஜித்தின் ராய், சயான், உதயகுமார், சந்தோஷ்சாமி ஆகிய 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கைதான உதயகுமார், சதீசன், திபு, மனோஜ்சாமியார், ஜம்ஷீர் அலி ஆகியோர் கடந்த வருடம் ஜூலை 17-ந் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரும் தங்களை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை யடுத்து அவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரில் 9 பேருக்கு கோத்தகிரி நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் வழங்கி, இந்த வழக்கை ஊட்டி நீதி மன்றத்திற்கு மாற்றியது. இதில் கோவை சிறையில் உள்ள திபுவிற்கு இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இதில் ஒருவரது உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் மற்றொருவருடைய உத்தரவாதத்தை தள்ளுபடி செய்தார். இதனால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த திபுவின் நண்பர் ரவீந்திரன் என்பவர் கோத்தகிரி கோர்ட்டில் 2-வது நபர் உத்தரவாதம் வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் ஸ்ரீதர், திபுவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதில் அவர், தினமும் காலையும் மாலையும் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் பட்டது.
இது குறித்து அவரது வக்கீல் சிவா கூறுகையில், திபுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கான உத்தரவு நகல் கோவை சிறைக்கு விரைவு தபால் மூலம் கோத்தகிரி கோர்ட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அது கிடைக்க பெற்ற உடன் திபு சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றார்.கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கடந்த வருடம் ஏப்ரல் 29-ந் தேதி கைது செய்யப்பட்ட திபுவுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கைதான 10 பேரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.