கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி திட்டங்குளம் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிட பணி, அங்குள்ள கண்மாய் பகுதியில் மயானத்தின் அருகில் நடைபெற்று வருகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அப்பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, பொது கழிப்பிட வசதி, மயான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் நேற்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் தங்க பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் முருகானந்தமிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோன்று கோவில்பட்டி லிங்கம்பட்டி பஞ்சாயத்து சமத்துவபுரம், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். பழுதடைந்த சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய பொருளாளர் சந்திரசேகரன், வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் முருகானந்தமிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com