நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து குமாரசாமி கருத்து - ‘காங்கிரஸ் எங்களை எப்படி நடத்துகிறது என்பதை பொறுத்தது’

“நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது என்பது காங்கிரஸ் எங்களை எப்படி நடத்துகிறது என்பதை பொறுத்தது” என்று முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து குமாரசாமி கருத்து - ‘காங்கிரஸ் எங்களை எப்படி நடத்துகிறது என்பதை பொறுத்தது’
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. சட்டசபை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அதிக இடங்களை கைப்பற்றிய பா.ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தது. அதன்படி கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது. குமாரசாமி முதல்-மந்திரி ஆனார்.

கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தபோது இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூறப்பட்டது. அதோடு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான அடித்தளம் குமாரசாமி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்ட முதல்-மந்திரிகள் கலந்து கொண்டு மெகா கூட்டணிக்கு அச்சாரம் போட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு இடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமையுமா? என்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு குமாரசாமி பதில் அளித்து கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்திப்பது என்பதுதான் எங்களது செயல் திட்டம். ஆனால் கூட்டணி அமைவது என்பது காங்கிரஸ் கட்சி எங்களை(ஜனதா தளம்-எஸ்) எப்படி நடத்துகிறது? என்பதை பொறுத்தது. மத்தியில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மெகா கூட்டணி என்பது தொடரும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இதற்கிடையே கூட்டணிக்கு காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பழைய மைசூரு பகுதியில் தொகுதிகள் பங்கீட்டில் பிரச்சினை எழும் என்று காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த பகுதியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி எதிரிகளாகவே இதுவரை செயல்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com