குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலம் நடந்தது.
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலம்
Published on

நாகர்கோவில்,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலம் நடந்தது.

முட்டம் வட்டார மையம் சார்பில் முட்டம், ஜேம்ஸ் நகர், கடியபட்டணம், பிள்ளை தோப்பு, அழிக்கால், சரல், காட்டுவிளை, திருநயினார்குறிச்சி ஆகிய பங்குகளின் அருட் பணியாளர்கள், அருட் சகோதரிகள், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் முட்டம் கடற்கரையை வந்தடைந்தது. அங்கு தூத்துக்குடியில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். முன்னதாக பிரார்த்தனை நடந்தது. இதில் முட்டம் பங்குத்தந்தை அமல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு புனித அலெக்ஸ் ஆலயத்தில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு சுனாமி காலனி, பள்ளி ஜங்ஷன் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. ஊர்வலத்துக்கு பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமை தாங்கினார். இதில் பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ராஜாக்கமங்கலம் துறை, காரவிளை மற்றும் பெரியகாடு கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது. பெரிய காட்டில் இருந்து புறப்பட்ட இந்த மவுன ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு பட்டை அணிந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி வந்தனர். ராஜாக்கமங்கலம் துறை தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தை ஊர்வலம் அடைந்ததும், அங்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. இதற்கு ராஜாக்கமங்கலம்துறை பங்குத்தந்தை ராஜ் தலைமை தாங்கினார். இதில் பங்கு பேரவை துணைத்தலைவர் ஆல்பின், செயலாளர் மில்டன், பொருளாளர் சேவியர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் கேசவன் புத்தன்துறை, பொழிக்கரை மற்றும் புத்தன்துறை ஊர்மக்கள் சார்பாக கேசவன்புத்தன்துறை தூய மாசற்ற திரு இருதய அன்னை ஆலய வளாகத்தில் இருந்து மவுன ஊர்வலம் நடந்தது. இதில் கேசவன்புத்தன்துறை பங்குத்தந்தை ஜெகன், பொழிக்கரை பங்குத்தந்தை நிக்ஷன், புத்தன்துறை பங்குத்தந்தை காட்பிரே, அருட்பணியாளர் ஆன்டனிதாஸ் ஸ்டாலின் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com