குமரி மாவட்ட சாமி சிலைகளுக்கு கேரள எல்லையில் வரவேற்பு

குமரி மாவட்ட சாமி சிலைகளுக்கு கேரள எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குமரி மாவட்ட சாமி சிலைகளுக்கு கேரள எல்லையில் வரவேற்பு
Published on

களியக்காவிளை,

நவராத்திரி விழாவில் பங்கேற்க சென்ற குமரி மாவட்ட சாமி சிலைகளுக்கு கேரள எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னரின் உடைவாளும் கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டது. சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் சிலைகள் பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும் வைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்பு மன்னனின் உடைவாள் சென்றது.

ஊர்வலம் நேற்று முன்தினம் அழகியமண்டபம், சுவாமியார்மடம், மார்த்தாண்டம் வழியாக குழித்துறை சென்றடைந்தது. இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் சாமி சிலைகள் தங்க வைக்கப்பட்டன.

நேற்று காலையில் குழித்துறை மகாதேவர் கோவிலில் இருந்து சாமி சிலைகளின் ஊர்வலம் மீண்டும் தொடங்கியது. ஊர்வலம் திருத்துவபுரம், படந்தாலுமூடு வழியாக கேரள-குமரி எல்லையான களியக்காவிளையை சென்றடைந்தது. அங்கு கேரள அரசு சார்பில் செண்டை மேளம், இசை வாத்தியங்கள் முழங்க, துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மன்னரின் உடைவாளும், சாமி சிலைகளும் கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் குமரி மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், திருவனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், கேரள எம்.எல்.ஏ.க்கள் ஹரிந்திரன், வின்சென்ட், கேரள தேவசம் போர்டு ஆணையர் ராதாகிருஷ்ணன், நெய்யாற்றின்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாமி சிலைகள் நேற்று இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்க வைக்கப்பட்டன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் நெய்யாற்றின்கரையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டு மாலையில் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையை சென்றடையும். அங்கு நவராத்திரி பூஜை முடிந்த பிறகு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு புறப்படும்.

சபரிமலையை பாதுகாப்போம் கோஷத்தால் பரபரப்பு

களியக்காவிளையில் சாமி சிலைகளுக்கு கேரள அரசு சார்பில் வரவேற்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, களியக்காவிளை பஸ் நிலையத்தில் இருந்தும், மேக்கோடு சாலையில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையை பாதுகாப்போம் என்ற வாசகம் அடங்கிய பேனர்களை ஏந்தியபடி கூட்டத்துக்குள் புகுந்தனர். தொடர்ந்து அவர்கள், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக கேரள அரசுக்கு எதிராகவும், சபரிமலையை பாதுகாப்போம் எனவும் கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பக்தர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதையடுத்து, போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தார். அதன்பின்பு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த போராட்டத்தில் களியக்காவிளை நகர பா.ஜனதா தலைவர் சரவணவாஸ் நாராயணன், மாவட்ட செயலாளர் முருகன், மருதங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com