கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
Published on

கரூர்,

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றானது கல்யாண பசுபதீஸ்வரர் கோவில். இந்த கோவில் கரூரின் மைய பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இந்த சிவாலயம், கொங்கு நாட்டுத் தலங்களில் முதல் தலமாகும். காமதேனு வழிபட்ட தலமாகும். இந்த சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர்.

இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, மார்கழி திருவிழா, ஆருத்ரா தரிசனம், கந்தசஷ்டி திருவிழா, பிரதோஷ பூஜைகள், பவுர்ணமி நாட்கள் விஷேசமான நாட்களாகும். கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு இன்று(வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள்

கடந்த 29-ந்தேதி கணபதி யாகத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. கடந்த 1-ந்தேதி மாலை 6 மணிக்கு கும்பாலங்காரம் நடைபெற்று மூல ஆலயத்திற்கு கலசம் சென்று கலாகர்ஷணம் செய்து வலமாக வந்து கலசங்களை யாகசாலையில் வைத்து முதல்கால யாகசாலைபூஜை தொடங்கியது. கடந்த 2-ந்தேதி காலை 2-ம்கால யாகசாலை பூஜையும், மாலை 3-ம்கால யாகசாலைபூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 4-ம்காலயாகசாலை பூஜையும், மாலை 5-ம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு மங்கள இசையும், அதிகாலை3 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாஹமும், அதிகாலை 4 மணிக்கு மஹாபூர்ணாஹூதி மற்றும் மகாதீபாராதனை நடைபெறும்.

பின்னர் கடங்கள் புறப்பாடு நடைபெற்று, காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரம் தொடர்ந்து பரிவாரமூர்த்திகள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு தண்ணீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறும். அதனைதொடர்ந்து மகாதீபாராதனை நடைபெறும். மதியம் 12.05 மணிக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, திருமுறை இசையும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com