குன்னூரில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

குன்னூரில் விடிய விடிய பலத்த மழை காரணமாக அங்கு மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளன. மேலும், மரங்கள் விழுந்து மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
குன்னூரில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
Published on

குன்னூர்,

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. தொடர் மழை மற்றும் கடுங்குளிர் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலை கடுங்குளிர் நிலவியது. இரவு இடியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

மழை நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்து நேற்று காலை வரை நீடித்தது. குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் தேயிலை வாரியம் செல்லும் சாலையில் உள்ள வீடுகளின் முன்புறம் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அந்த பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளன. இதையடுத்து குடியிருப்பு வாசிகள் மண் மூட்டைகளை அடுக்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், மழை காரணமாக குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரி அருகே நேற்று முன்தினம் 2 மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து கம்பங்கள் சாய்ந்தன. இதனால் லாலி ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரி குடியிருப்பு, ரெய்லி காம்பவுண்ட், ஆரஞ்ச் குரோவ் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நேற்று அதிகாலை மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் ஜான்சன், கமல்குமார் ஆகியோர் தலைமையில் மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முன்னதாக மின்வாரிய ஊழியாளர்கள் அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்.

மேலும், மரம் விழுந்த பகுதி வனப்பகுதி என்பதால் மின் ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு சம்பவ இடத்துக்கு சென்றனர். அதன் பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு புதர்கள் சமன் செய்யப்பட்டு ஊழியர்களை 2 மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் கீழே சாய்ந்த மின் கம்பத்தை சீரமைத்து மின் இணைப்பு கொடுத்தனர். நேற்று மதியம் 2 மணிக்கு பின் அந்த பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது. மின்வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com