மதுராந்தகம் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது

மதுராந்தகம் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி பணத்தை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது
Published on

மதுராந்தகம்,

விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் கவாஸ்கர் (வயது 38). இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். தனக்கு சொந்தமான லாரியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி 25-ந் தேதி இரவு அவரே டிரைவராக புறப்பட்டார்.

மதுராந்தகம் வடக்கு புறவழிச்சாலை மேம்பாலத்தின் அருகே லாரியை நிறுத்தி விட்டு டயரில் உள்ள காற்றின் அளவை செந்தில் கவாஸ்கர் பரிசோதித்து கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரின் தலையில் கத்தியால் வெட்டி அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாயை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

தனிப்படை அமைப்பு

இதுகுறித்து செந்தில் கவாஸ்கர் மதுராந்தகம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மேற்பார்வையில், மதுராந்தகம் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், கிஷோர்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக 2 பேர் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டை அடுத்த திம்மாவரத்தை சேர்ந்த பிரேம்குமார் (23), உத்திரமேரூரை அடுத்த காலித்தண்டலத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் (23) என்பதும், லாரி டிரைவரை வெட்டி பணத்தை பறித்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கத்தி, இரும்பு குழாய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மதுராந்தகம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் செய்து 2 பேரையும் மதுராந்தகம் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து தப்பி ஓடிய செங்கல்பட்டை அடுத்த பழவேலியை சேர்ந்த விக்னேஷ், திம்மாவரத்தை சேர்ந்த பார்த்திபன், கரும்வேப்பம்பூண்டியை சேர்ந்த ஆசைத்தம்பி, புத்தொளியை சேர்ந்த வெற்றிவேல், அப்பு, வாத்தி ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து 48 மணி நேரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடித்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி பாராட்டினார். குற்றவாளிகள் அனைவரும் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்கள் என துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com