சேலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நீதிபதிகள் பங்கேற்பு

தேசிய சட்ட உதவி தினத்தையொட்டி சேலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
சேலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நீதிபதிகள் பங்கேற்பு
Published on

சேலம்,

இந்தியா முழுவதும் தேசிய சட்ட உதவி தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சேலம் மத்திய சட்டக்கல்லூரி இணைந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சேலம் அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள நீதிதேவதை சிலை முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்ட மக்கள் நீதிமன்ற நிரந்தர தலைவர் நீதிபதி குணவதி, நீதிபதிகள் ரவீந்திரன், எழில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாஜிஸ்திரேட்டுகள் சத்யபிரியா, தங்கப்பாண்டி, சேலம் வக்கீல்கள் சங்க செயலாளர் அய்யப்பமணி, மத்திய சட்டக்கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா, மற்றும் வக்கீல்கள், சட்டக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஊர்வலம் கோர்ட்டு வளாகத்தில் இருந்து புறப்பட்டு அஸ்தம்பட்டி ரவுண்டானா, காந்திரோடு சந்திப்பு, வின்சென்ட், செரிரோடு, அரசு கலைக்கல்லூரி, பிரட்ஸ் ரோடு வழியாக சேலம் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.

ஊர்வலத்தில் சென்ற மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு வரும் வழக்குகளை சமரச தீர்வு மூலம் எளிதாக கையாளலாம் என்றும், சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம் என்றும், சமரச தீர்வு மையத்தில் இருதரப்புக்கும் வெற்றி, சமரச தீர்வு மையத்தில் முடிக்கப்படும் வழக்குகளுக்கு அப்பீல் என்பது கிடையாது, என்பன போன்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்.

மேலும் துண்டு பிரசுரங்களும் வினியோகித்தனர். அதில் சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் யார், யார் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் சிவில், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்கு, நீதிமன்றம் செல்லாமலேயே சமரச தீர்வு ஏற்படுத்துதல், மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், செக் மோசடி வழக்குகள், தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

ஊர்வலம் முடிவடைந்ததும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகளை சந்தித்து கலெக்டர் ரோகிணி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com