எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது: தமிழகத்தில் வெற்றிடம் இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதனால் தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது: தமிழகத்தில் வெற்றிடம் இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
Published on

கடத்தூர்,

ஈரோடு புறநகர் மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனு வாங்கும் நிகழ்ச்சி கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எம்.எல்.ஏக்கள் இ.எம்.ஆர். ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. வினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்கினார்கள்.

விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம ஆகியோர் தலைமையிலான இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக ஒருவர் கூறியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கும் போது இங்கு வெற்றிடம் இல்லை.

நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது போல, உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தது போல உள்ளாட்சி தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும். இடைத் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் தி.மு.க தோல்வியை தழுவியது.

மாணவ, மாணவிகள் நலன் கருதியும், சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையிலும் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பாட இடைவெளி நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, ஆந்திர மாநிலத்தில் மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் புத்தகமில்லா நாளாக நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தொடருமா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, 'தமிழகத்தில் புத்தகமில்லாத நாள் தேவையில்லை. மாணவர்களுக்கு விளையாட்டு, யோகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ.76.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விளையாட்டு மைதானங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com