ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக மது விற்பனை அமோகம்

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று 2-வது நாளாக மது விற்பனை அமோகமாக நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக மது விற்பனை அமோகம்
Published on

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த 2 நாட்களிலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மொத்தம் ரூ.14 கோடியே 16 லட்சத்து 77 ஆயிரத்து 610-க்கு மது விற்பனை நடந்து இருந்தது. பின்னர் கோர்ட்டு உத்தரவு காரணமாக கடந்த 9-ந் தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் நேற்று முன்தினம் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது. தமிழக அரசு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் டோக்கன் வழங்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் நீல நிற டோக்கன்கள் குடிமகன்களுக்கு வழங்கப்பட்டது.

143 டாஸ்மாக் கடைகள்

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 143 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடிமகன்கள் காலை 8 மணி முதலே டாஸ்மாக் கடை முன்பு காத்திருக்க தொடங்கினார்கள். மது பிரியர்கள் முகக்கவசம் அணிந்து, குடை பிடித்துக்கொண்டு சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் மது வாங்குவதற்காக காத்திருந்தனர்.

காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது மதுபிரியர்களுக்கு ஆரஞ்சு நிற டோக்கன்கள் வழங்கப்பட்டன. சிறிய கடைகள் என்றால் ஒரு மணி நேரத்துக்கு 70 டோக்கன்களும், பெரிய கடைகள் என்றால் ஒரு மணி நேரத்துக்கு 100 டோக்கன்களும் வினியோகம் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து மது பிரியர்கள் தங்களது தேவையான மதுவை வாங்கினார்கள்.

அமோகம்

டாஸ்மாக் கடைக்கு முகக்கவசம் அணியாமலும், குடை இல்லாமலும் வந்த மதுபிரியர்களை போலீசார் திருப்பி அனுப்பினார்கள். ஒருசில இடங்களில் குடை கொண்டு வராதவர்களுக்கு குடை கொண்டு வந்தவர்கள் கொடுத்து உதவி செய்ததையும் பார்க்க முடிந்தது. சிலர் தங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பைகளில் அதிகளவு மதுவை வாங்கிச்சென்றனர். ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியில் அருகே அருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த 2 கடைகளிலும் நேற்று கூட்டம் அலைமோதியது. இதில் ஒரு கடையில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் குடை பிடித்தபடி வரிசையில் நின்று மதுவை வாங்கினார்.

அப்போது அவர் கூறும்போது, நானும், எனது கணவரும் கூலித் தொழிலாளர்கள். உடல் அசதிக்காக இருவரும் சேர்ந்து அவ்வப்போது மது அருந்துவோம். அதற்காகத்தான் நான் இன்று (அதாவது நேற்று) மது வாங்க வந்தேன். முதலில் நான் கடைக்கு வரும்போது குடை கொண்டு வரவில்லை. இங்குள்ள ஒருவர் எனக்கு குடை கொடுத்து உதவி செய்தார் என்றார். இதேபோல் ஈரோடு மாநகர் பகுதியில் அகில்மேடு வீதி, குமலன்குட்டை, திருநகர்காலனி, வீரப்பன்சத்திரம், வில்லரசம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, அந்தியூர், பவானி, பவானிசாகர், கோபி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மதுவிற்பனை அமோகமாக நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com