மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும் ; முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும் ; முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையை அடுத்த தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் கண்டிப்பாக வீட்டைவிட்டு வெளியேறும் போது முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது.

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலங்களிலும் கூடுதலாக பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்காளம், அசாம், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த 1,397 தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர். அவர்களை ரெயில் மூலம் அனுப்பி வைக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அங்கு ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பது தாமதமாகும்.

புதுவை மாநிலத்தில் வருமானத்தை பெருக்க மதுக்கடைகளை திறக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் கவர்னர் தமிழகத்தில் விற்கும் விலையில் தான் புதுவையிலும் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கோப்பை திருப்பி அனுப்பி விட்டார். அதன்பின் மறுபரிசீலனை செய்து கோப்பை திருப்பி அனுப்பினோம்.

இன்னும் அந்த பிரச்சினை தீராத நிலையில் உள்ளது. அதற்கான முடிவை எங்களுடைய அரசு எடுக்கும். விரைவில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படும்.

இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் காரைக்காலை சேர்ந்த ஒருவர் புதுவையில் மதுக்கடைகள் திறப்பது சம்பந்தமாகவும், தற்காலிக உரிமத்தை ரத்து செய்துள்ள மதுக்கடைகளை தற்போது திறக்கக்கூடாது எனவும் என் மீது தனிப்பட்ட முறையில் தவறான குற்றச்சாட்டை கூறி மனு தாக்கல் செய்துள்ளார். அது விசாரணைக்கு வரும்போது நீதிபதிகள் தெள்ளத்தெளிவாக அந்த வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளனர்.

அதில் மதுக்கடைகளை பொறுத்தவரை அரசின் கொள்கை முடிவாக உள்ளது. தற்காலிகமாக மூடப்பட்ட கடைகளை திறக்க கூடாது. ஆனால் கலால்துறையின் விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் என் மீது தனிப்பட்ட முறையில் கூறப்பட்ட குற்றச்சாட்டை தள்ளுபடி செய்துள்ளனர்.

என் மீது என்னென்ன புகார்களை கூறி உள்ளனரோ, ஆதாரமற்ற அந்த புகார்கள் மீது அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். இதுபோன்று உள்நோக்கத்தோடு புதுவை மாநிலத்துக்கு வரும் வருவாயை தடுப்பது மட்டுமல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை கூறி அரசின் மீதும் என் மீதும் தனிப்பட்ட முறையில் களங்கம் கற்பிக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் யாரென்று புதுவை மக்களுக்கு தெரியும். இதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை திரட்டுவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் உள்ளன. அதனை நாம் தகர்த்தெறிய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், நலத் திட்டங்களை செயல்படுத்தவும் அதிக நிதி தேவைப்படுகிறது. அதனை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com