குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்துவது கொரோனா நோயாளிகளின் மன ஆரோக்கியத்தை சிதைக்கும் மருத்துவ நிபுணர்கள் கருத்து

அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது கொரோனா நோயாளிகளின் மன ஆரோக்கியத்தை சிதைக்கும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.
குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்துவது கொரோனா நோயாளிகளின் மன ஆரோக்கியத்தை சிதைக்கும் மருத்துவ நிபுணர்கள் கருத்து
Published on

நாக்பூர்,

கொரோனா வேகமாக பரவும் தொற்றுநோய் என்பதால், அதன் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆனால் இதுவே அவர்களது மன உறுதியையும், ஆரோக்கியத்தையும் சிதைக்க வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் இந்திரஜித் கண்டேகர் கூறியதாவது:-

கொரோனா நோயாளிகளுடன் தங்குவதற்கு அல்லது அவரை பார்வையிடுவதற்கு குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்காதது கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். ஏனெனில் பாதிக்கப்படுபவர் தனியாக சிரமப்படுவதாக உணரும்போது குணமடையும் நம்பிக்கையை இழக்கிறார்.

கொரோனா நோயாளிகளுடன் தங்க விருப்பம் தெரிவிக்கும் அன்புக்குரியவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பின் அவரை முககவசம் அணிந்து உடன் தங்க அனுமதிக்க வேண்டும்.

டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமின்றி நோயாளிகளை குடும்பத்துடன் வழக்கமான தொடர்பில் வைப்பது சிகிச்சையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவேண்டும்.

அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்வது நோயாளிகளுக்கு மிக முக்கிய சிகிச்சையாகும். இது அவர்களின் உயிர்வாழும் விருப்பத்தை அதிகரிக்க உதவும்.

சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது மற்றும் இயற்கை உபாதையை கழிப்பது என தான் வழக்கமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கூட மேற்கொள்ள முடியாத நோயாளிகளுக்கு மற்றொருவரின் துணை கண்டிப்பாக தேவை. இதை ஒரு குடும்ப உறுப்பினரால் மட்டுமே கொடுக்க முடியும்.

சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நோயாளியையும் தனிப்பட்ட முறையில் கவனித்து 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் உதவி வழங்குவது என்பது சத்தியமற்றது.

இது குறித்து நாக்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் மனநல மருத்துவ உதவி பேராசியர் டாக்டர் சோனாக்ஷி ஜர்வா கூறியதாவது:-

மனநல நிபுணர்களின் குழு அனைத்து நோயாளிகளுக்கும் உளவியல் ரீதியான ஆதரவை வழங்கி வருகிறது. அதேநேரம் பிரத்யேக குழு அவர்களின் குடும்பத்துடன் தொடர்பில் செயல்படுகிறது. இந்த குழு அவர்களின் தற்போதைய உடல்நலம் குறித்த தகவல்களை வழங்குவதுடன், அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறது.

இதுபோன்ற செயல்கள் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட மற்றும் கண்டிப்பாக ஒருவர் துணை தேவைப்படும் கொரோனா நோயாளிகளுடன், லேசான அறிகுறிகளுடன் உள்ள குடும்ப உறுப்பினர்களை ஒரே வார்டில் அனுமதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com