‘கஜா’ புயல் நிவாரணத்துக்கு அமெரிக்காவில் நடந்த ‘ மொய் விருந்து’

கஜா புயல் நிவாரணத்துக்கு அமெரிக்காவில் மொய் விருந்து நடைபெற்றது.
‘கஜா’ புயல் நிவாரணத்துக்கு அமெரிக்காவில் நடந்த ‘ மொய் விருந்து’
Published on

கீரமங்கலம்,

தமிழகத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கஜா புயல் கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த மாவட்டங்களில் வசித்து வந்த பொதுமக்கள் தங்களது உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் சிலர் உயிரிழந்தனர். மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மரங்கள் சாய்ந்ததால் குடிநீர், மின்சாரம் இன்றி பல நாட்கள் தவித்தனர். விவசாயத்தை நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியானது. தங்கள் வயலில் விளைபொருட்களை உற்பத்தி செய்து, மற்றவர்களின் பசியை போக்கிய விவசாயிகள் தற்போது உணவு இல்லாமல் நிவாரணம் கிடைக்குமா? என்று ஏங்கி தவித்தனர். இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வாரி வழங்கி வருகிறார்கள்.

கஜா புயல் பாதிப்பால் மிகுந்த மனவேதனை அடைந்த அமெரிக்க வாழ் தமிழர்களும், பாதிக்கப்பட்ட நம் இன மக்களுக்கு ஏதாவது உதவி புரிய நினைத்தனர். இதையடுத்து அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து கலாசார விழாவான மொய் விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்ட முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் மொய் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு வகையான சைவ, அசைவ உணவுகள் விருந்தாக அளிக்கப்பட்டது. மொய் விருந்தில் கலந்து கொண்ட அனைவரும், சாப்பிட்ட பின் மொய் எழுதினர். இதில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் வசூலானது.

இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யாமினி கூறுகையில், இந்த மொய் விருந்து நிகழ்ச்சியில், வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் தமிழர்கள் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இங்கு வந்து விருந்து சாப்பிட்டு தாராளமாக மொய் வழங்கிய அனைவருக்கும் நன்றி என்றார்.

முனைவர் பூங்குழலி கூறுகையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிகழ்வாக இது இருந்தாலும், தமிழர்கள் மட்டுமல்லாமல், இங்கு வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாளி என இந்தியர்களாக ஒன்று கூடியது மனிதநேயத்தை காட்டியது என்றார்.

மொய் விருந்து மூலம் கிடைத்த 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொண்டு முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான எல்.என்.புரம், மாங்காடு, வடகாடு, கொத்தமங்கலம், செரியலூர், உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் தெருவிளக்குகளை அமைக்க இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் இருந்தாலும் நமது சொந்த மண்ணில் உள்ள தமிழர்களுக்காக மொய் விருந்து நடத்தி நிதி திரட்டிய இந்த சம்பவம் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com