மதுரை ரெயில் நிலையத்துக்கு சுற்றுச்சூழல் பசுமை ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

மதுரை ரெயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது.
மதுரை ரெயில் நிலையத்துக்கு சுற்றுச்சூழல் பசுமை ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
Published on

மதுரை,

தென்னக ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்கள் உள்ளன. இதில் மதுரை ரெயில் நிலையம் பாரம்பரியமிக்க வரலாற்று சிறப்பு வாய்ந்த ரெயில் நிலையமாகும். இந்தநிலையில் மதுரை ரெயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் தூய்மையை பராமரிக்க வேண்டும், பசுமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சுற்றுச்சூழலுக்கான தரச்சான்று அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தரச்சான்று வழங்கும் நிறுவனங்கள் மூலம் ரெயில் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சர்வதேச தணிக்கைக்கு பின்னர் தரச்சான்று வழங்கப்படுகிறது. அதன்படி, தென்னக ரெயில்வேக்கு உள்ள கோட்டங்களில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ஆய்வினை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டினை சேர்ந்த தர மேலாண்மை மதிப்பீட்டுக்குழுவின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் செய்து வருகிறது. இதுகுறித்து தரச்சான்று மதிப்பீட்டுக்குழு பிரதிநிதி கார்த்திகேயன் கூறும்போது, ரெயில்நிலைய பிளாட்பாரங்களில் விற்பனை செய்யப்படும் உணவு, குடிநீர், ரெயில் நிலைய தூய்மை, சரக்குகளை கையாளுதல், மின்சார பயன்பாடு ஆகியவற்றில் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப பசுமை சதவீதம் வழங்கப்படும். அதில், சர்வதேச தரத்துக்கு இணையான சதவீதத்தை பெற்றதால் மதுரை ரெயில் நிலையத்துக்கு இந்த சான்று கிடைத்துள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com