மனித உரிமைகள் பற்றி ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய மதுரை மாணவி; புதிய அனுபவத்தை கற்றுக்கொண்டதாக பேட்டி

மனித உரிமைகள் குறித்து ஐ.நா. சபை கூட்டத்தில் மதுரை மாணவி பிரேமலதா பேசினார். அங்கிருந்து ஊர் திரும்பிய அவர், புதிய அனுபவத்தை கற்றுக்கொண்டதாக பேட்டி அளித்தார்.
மனித உரிமைகள் பற்றி ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய மதுரை மாணவி; புதிய அனுபவத்தை கற்றுக்கொண்டதாக பேட்டி
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேமலதா. கல்லூரி மாணவியான இவருக்கு ஐ.நா சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற அழைப்பு வந்திருந்தது.

இந்தநிலையில், ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜெனீவா சென்ற அவர், மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் அங்கு உரை நிகழ்த்தினார். பின்னர் மதுரை திரும்பிய அவருக்கு மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பேட்டியளித்த மாணவி பிரேமலதா கூறியதாவது:- ஐ.நா. சபையில் உரையாற்றியதன் மூலம் புதிய அனுபவத்தை கற்றுக்கொண்டேன். அங்கு நான் உருவாக்கிய குறும்படத்தை திரையிட்டு அது சம்பந்தமாக என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான பதில்களை நான் அளித்தேன். இந்த அனுபவம் மிக புதுமையாக இருந்தது. பிற நாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடைய பேச்சுகளையும் கவனித்தேன்.

மனித உரிமையின் முக்கியத்துவம் பற்றியும் கேட்டனர். அது சம்பந்தமாகவும் பேசினேன். மனித உரிமை குறித்த கல்வியை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளிலும் அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மனித உரிமை கல்வியை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசு பள்ளியில் பயின்ற மாணவியான பிரேமலதா, ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்று பேசியதற்கு அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com